தமிழக சுற்றுலா பகுதிகளை கையகப்படுத்தும் கேரளா: விவசாயிகள் கொந்தளிப்பு

Tourist Places in Tamil Nadu -தமிழக சுற்றுலா பகுதிகளை கையகப்படுத்த கேரள அரசு மேற்கொள்ளும் "டிஜிட்டல் ரீ சர்வே" காரணமாக தமிழக விவசாயிகள் கொந்தளித்து வருகின்றனர்.;

Update: 2022-11-10 02:22 GMT
தேவாரம் அருகே தமிழக வனப்பகுதியில் கேரளா வைத்துள்ள போர்டு.

Tourist Places in Tamil Nadu -முல்லை பெரியாறு அணை குறித்த தமிழக அரசின் மவுனம் மற்றும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் ஆதரவு நிலைபாட்டால், தென்மாவட்ட விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக ரூல்கர்வ் முறையில் பெரியாறு அணையில் நீர் தேக்குவது, தமிழக அரசின் அனுமதியின்றி கேரள பகுதிக்கு தண்ணீர் திறப்பு என தொடர் சர்ச்சைகள் நடக்கின்றன. கேரள அரசு அழைப்பை ஏற்று, அங்கு சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயனின் கம்யூனிஸ்ட் அரசு மாடலை வெகுவாக புகழ்ந்தார். அதன்பின் தமிழக பொதுப்பணித்துறை அணை பிரச்சனைகளை கிடப்பில் போட்டு விட்டது. பெரியாறு அணை, "டிஜிட்டல் ரீ சர்வே" பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு மவுனம் சாதிக்கிறது.

"சர்வே" சர்ச்சை:

கேரள அரசு "டிஜிட்டல் ரீ சர்வே" செய்கிறோம் என்ற போர்வையில் தமிழக எல்லை பகுதியில் அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் விதிமுறைகளை மீறி எல்லையில் உள்ள தமிழக பகுதியை கேரளாவுடன் இணைக்கும் பணிகளை ஜரூராக செய்து வருகிறது. அளவீடு பணியின் போது தமிழக அதிகாரிகள் அருகில் இல்லாமல், இருப்பதும் கேரளாவின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு பெரும் உதவி சேர்க்கிறது.

சுற்றுலா தலங்களை வளைக்கும் கேரளா:

கேரளா, இடுக்கி மாவட்டத்தில் தமிழக எல்லையை பகிர்ந்து கொள்ளும் பகுதிகளில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. சமீபத்தில் சதுரங்கப்பாறை வனத்தில் நீல குறிஞ்சி பூக்கள் பூத்ததை பல்லாயிரம் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இங்குள்ள தமிழக பகுதிக்கு சொந்தமான வனங்களில் புல்மேடுகள் அதிகளவில் உள்ளன. இவற்றில் "டென்ட்" அமைத்து சுற்றுலா பயணிகள் இரவு தங்குவதற்கு வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. கேரள சுற்றுலா வழிகாட்டிகளின் இந்த அடாவடியை தமிழக வனத்துறை கண்டு கொள்வதில்லை. அனுமதியின்றி கேரள சுற்றுலா வாகனங்களில் தமிழக பகுதிக்கு பயணிகள் அழைத்து வரப்படுவது தொடர் கதையாகி உள்ளது. தமிழக பகுதிக்குள் நுழைய போக்குவரத்து துறையின் அனுமதி பெறாமல், லோயர்கேம்ப், இறைச்சல் பாலத்திற்கு கேரள சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இப்போது "ரீ சர்வே" என்று தமிழக வனப்பகுதியை கபளீகரம் செய்யும் பணி நடக்கிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்தா விட்டால், உரிமை பறி கொடுத்த நிலைக்கு தள்ளப் படுவோம்.

இது குறித்து தமிழக விவசாயிகள் கூறுகையில், "தேனி மாவட்டம், தேவாரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ஆனைக்கல்-பாப்பம்பாறைக்கு இடைப்பட்ட பகுதியில், இது, கேரளாவிற்கு சொந்தமான பகுதி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதை தடுக்காமல் விட்டு விட்டால், கம்பம் போலீஸ் ஸ்டேசன் அமைந்துள்ள இடம் கேரளாவிற்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகை வைக்கும் நிலை உருவாகும், என்றனர்.

தமிழக அரசிற்கு பெரும் குடைச்சலை கொடத்து வரும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். அவர் இந்த விஷயத்தை கையில் எடுத்து கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் அறிவித்தால் மட்டுமே தமிழக அதிகாரிகள் செயல்பட தொடங்குவார்கள். இல்லாவிட்டால், தமிழக சுற்றுலா பகுதிகளை தமிழக அதிகாரிகளே கேரளாவிற்கு தாரை வார்த்து கொடுத்து விடுவார்கள் என தமிழக மக்கள் கூறி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News