கேரள மாணவர்கள் படிக்க வர தடையில்லை: தேனி கல்வி அலுவலர் தகவல்

தேனி மாவட்டத்திற்கு, கேரள மாணவர்கள் படிக்க வர தடையில்லை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-30 15:00 GMT

பைல் படம்

நாளை மறுநாள் தேனி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட  உள்ள நிலையில் கேரள மாணவர்கள் படிக்க வருவதற்கு எந்த தடையும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் தெரிவித்தார்.

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் மிகவும் அதிகளவில் உள்ளது. தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவில் தொற்று பரவல் அதிகம் உள்ளதால் தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளை திறக்கலாமா? வேண்டாமா? என தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

காரணம், தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், கல்லுாரிகளில் கேரள மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர்.

இவர்களை அனுமதிப்பதா? வேண்டமா? என்பதில் பெரும் தயக்கமும், குழப்பமும் இருந்து வருகிறது. காரணம் தமிழகத்தில் தற்போது தொற்று பரவல் மிகவும் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள் மூலம் தமிழகத்தில் தொற்று பரவி விடக்கூடாது என்ற அச்சம் உள்ளது.

இந்த அச்சம் தமிழக சுகாதாரத்துறை, தமிழக அரசுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் அதிகம் உள்ளது. கேரள எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பதால் பலன் இல்லை.

காரணம் தமிழகம் முழுவதும் உள்ள பல முக்கிய பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் கேரள மாணவர்களே படிக்கின்றனர். இந்நிலையில் பள்ளி, கல்லுாரிகள் திறப்பில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

கேரள மாணவர்கள் தமிழக பள்ளி, கல்லுாரிகளில் படிக்க வர ஏதாவது தடைகள், விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா என தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செந்திவேல்முருகனிடம் கேட்டோம், 'அவர்களும் மாணவர்கள் தான் சார். இதுவரை அவர்கள் பள்ளிகளுக்கு வர எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை' என்றார்.


Tags:    

Similar News