முல்லை பெரியாறு அணையில் கேரள போலீசார்: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

முல்லைப்பெரியாறு அணையில் கேரள உளவுப்போலீசார் அனுமதியின்றி ஆய்வுப்பணியில் ஈடுபட்டதற்கு, தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-03-14 02:15 GMT

கோப்பு படம் 

முல்லைப்பெரியாறு அணை முழுக்க முழுக்க, தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு கேரள உளவுப்பிரிவு போலீசார் 3 பேர் கொண்ட குழுவினர் தமிழக படகின் மூலம் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றுள்ளனர்.

இது குறித்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது: நேற்று மதியம் 12 மணிக்கு கேரளாவை சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள் குழு,  தமிழக படகில் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று பார்வையிட்டு வந்துள்ளனர். அவர்கள் யார் என்பதை அணைப்பகுதியில் இருக்கும் தமிழக பொறியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் குப்தா கடந்த வாரம் வந்து விட்டுச் சென்ற நிலையில், தற்போது கேரள மாநில உளவுத்துறை அதிகாரி யார், எதற்காக வந்தார், அவர்களுடைய நோக்கம் என்ன? என்பது குறித்தான தெளிவான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக பொறியாளர்கள் ஒப்படைக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரள மாநில அரசு பல்வேறு நரித்தனங்களை அரங்கேற்றி வரும் நிலையில், அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முழுவதும் முற்றிலுமாக தேனி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். என்ன தைரியம் இருந்தால் தமிழக படகில் சென்று அணையை பார்வையிடும் அவலம் ஏற்பட்டிருக்கும். தமிழக அரசு இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். கேரள மாநில அரசை நம்புவதும், மண்குதிரையை நம்புவதும் ஒன்று தான். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News