கேரளம்: அன்று வாகனத்தை மறித்தனர்- இன்று தொழிலாளர்களை அனுமதிக்கவில்லை
முல்லை பெரியாறு அணை பொதுப்பணித்துறை குடியிருப்புகளை பராமரிக்க சென்ற தொழிலாளர்களையும் கேரளா திரும்ப அனுப்பி உள்ளது;
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் சமீபகாலமாக கேரளா அதிகளவில் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு தகுந்த பதில் நடவடிக்கைகளில் இறங்கவில்லை. கேரளாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழக அரசு சற்று நிதானம் காட்டி வருகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கேரளா அடுத்தடுத்து கெடுபிடிகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைப்பெரியாறு அணை பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பை சீரமைக்க தளவாட பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை அனுமதிக்கவில்லை. விவசாயிகள் போராட்டம் நடத்திய பின்னர் அனுமதித்தனர். தற்போது அங்கு பராமரி்ப்பு பணிகளுக்கு சென்ற பணியாளர்களை திரும்ப அனுப்பி உள்ளனர். முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பிரிவு தமிழக பொதுப்பணித்துறை அலுவலர்கள் வசிக்கும் குடியிருப்பையே தமிழக அரசால் சீரமைக்க முடியவில்லை.
இந்த நிலையில், முல்லை பெரியாறு அணையில் மீதம் உள்ள பேபி அணை பராமரிப்பு பணிகளை திமுக அரசு எந்த அளவு விரைந்து முடிக்கப்போகிறது என்ற சந்தேகம் விவசாயிகளின் மத்தியில் எழுந்துள்ளது. தமிழக அரசு கேரளாவின் அத்துமீறல் நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்து பதில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் போராட்டத்தில் இறங்க நேரிடும் என தமிழகத்தின் ஐந்து மாவட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.