முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரை இடுக்கி அணைக்கு திருப்பி விடும் கேரள அரசு..!
முல்லை பெரியாறு அணைக்கு வரவேண்டிய மழைநீர் முழுவதையும் கேரள அரசு ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து இடுக்கி அணைக்கு திருப்பி விடுகிறது.
பெரியாறு அணைக்கு தற்போது வரை விநாடிக்கு 2000 கனஅடி கூட நீர் வரத்தில்லை. ஆனால் வண்டிப்பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதே இதற்கு சாட்சி என தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டினை எழுப்பி உள்ளனர்.
இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் சிலர் கூறியதாவது:-
முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து பகுதி மொத்தம் 777 சதுர கி.மீ., ஆகும். அணையின் முழு நீர் மட்ட உயரம் 152 அடியாக உள்ளது. இதில் 142 அடி வரை நீரை தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனாலும் கேரள அரசு 136 அடிக்கு மேல் நீர் மட்டத்தை உயர்த்த விடாமல் தடுத்து வருகிறது. முல்லை பெரியாறு அணை நீர் பிடிப்பு பரப்பில் போதுமான மழை பெய்துள்ளது.
இந்த 777 சதுர கி.மீ., பரப்பில் பெய்யும் மழைநீர் முழுவதையும் பெரியாறு அணையில் தேக்க அணை ஒப்பந்தம் மூலம் தமிழகத்திற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் மழை மிக, மிக குறைவு. முல்லை பெரியாறு அணை நீர் மூலம் தான் தமிழகத்தின் பாசன நீர்த் தேவையும், குடிநீர் தேவையும் தற்போது வரை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
தேக்கடியில் பெய்யும் மழைநீரையும், முல்லை பெரியாறு அணையில் பெய்யும் மழைநீரையும் மட்டுமே தமிழக பொதுப்பணித்துறையால் கணக்கெடுக்க முடியும். ஆனால் அணை நீர் வரத்து பகுதியான 777 சதுர கி.மீ., பரப்பில் பெய்யும் மழைநீரை கேரள அரசு தான் கணக்கெடுக்கிறது.
அந்த அரசு விரும்பினால் தகவல் கொடுக்கும். விரும்பாவிட்டால் ரகசியம் காத்து விடும். இல்லாவிட்டால் மழையளவு குறைந்துள்ளதாக கணக்கு காட்டி விடும். வனப்பகுதிக்குள் பெய்யும் மழையினை யாராலும் நிரூபிக்க முடியாது. கேரளாவில் கனமழை கொட்டி வருகிறது. இவ்வளவு மழை பெய்தும் முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு இந்த ஆண்டு ஒருமுறை கூட 2000ம் கனஅடியை எட்டவில்லை. அணை நீர் மட்டம் 131 அடி மட்டுமே எட்டி உள்ளது.
இடுக்கி அணை, முல்லை பெரியாறு அணையினை விட 8 மடங்கு பரப்பளவில் பெரியது. இவ்வளவு பெரிய அணை ஒரு நீர் மட்டம் ஒரே வாரத்தில் பல அடி உயர்ந்துள்ளது. முல்லை பெரியாறு அணை நிறைந்தால் மட்டுமே தண்ணீர் வண்டிப்பெரியாறு ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்படும். தற்போது முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 131 அடிக்கும் குறைவாக உள்ள நிலையில் வண்டிப்பெரியாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஏற்கனவே கேரள அரசு கட்கி அணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரை தடுத்து இடுக்கி அணைக்கு திருப்பி விட்டுள்ளது. இந்த நிலையிலும் கடந்த ஆண்டு வரை முல்லை பெரியாறு அணைக்கு குறிப்பிடத்தக்க அளவு நீர் வந்தது. தற்போது இதனையும் கேரள அரசு குறைத்து விட்டது. குறிப்பாக பாம்பனாறு தண்ணீர் பட்டுமலை, பருந்துப்பாறை வழியாக முல்லை பெரியாறு அணைக்கு வந்து கொண்டிருந்தது. கேரள அரசு இதனை தடுத்து, சுரங்கம் தோண்டி இந்த நீர் முழுவதையும் இடுக்கி அணைக்கு கொண்டு செல்கிறது.
முல்லை பெரியாறு அணை நீர் பிடிப்பு பரப்பான 777 சதுர கி.மீ.,ல் 277 சதுரை கி.மீ., தமிழக வனப்பகுதிகளாகும். இந்த வனப்பகுதியில் காமராஜர் காலத்தில் செண்பகத்தோப்பு என்ற இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணையினை கேரள வனத்துறை இடித்து விட்டது. தமிழக கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி இந்த தடுப்பணையினை மீண்டும் கட்டுவது, அதற்கான செலவினை தமிழக அரசு ஏற்பது என உடன்பாடானது.
இதன்படி ராஜபாளையம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோட்டயம் மத்திய கூட்டுறவு வங்கியில் செண்பகத்தோப்பு தடுப்பணை கட்ட தேவையான பணத்தை டெபாஸிட் செய்தார். ஆனால் இந்த பணம் டெபாஸிட் செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்னமும் தடுப்பணையினை சீரமைக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக அரசும் இது பற்றி கேள்வி எழுப்பவில்லை. எனவே தமிழக வனப்பகுதியில் பெய்யும் மழைநீரும் இடுக்கி அணைக்கு செல்கிறது என்பது வேதனையான உண்மை.
சிறு, சிறு சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கேரளா சிறு, சிறு தடுப்பணைகள் மூலமும், ஓடைகள் வெட்டியும் முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீர் முழுவதையும் இடுக்கி அணைக்கு கொண்டு சென்று விட்டனர். இதே நிலை நீடித்தால், கேரளாவில் எவ்வளவு மழை பெய்தாலும் இனிமேல் முல்லை பெரியாறு அணைக்கு தண்ணீர் வருமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியான விஷயமாக மாறி உள்ளது. உடனடியாக தமிழக அரசு தலையிட்டு இந்த பிரச்னையை தீர்க்க மத்திய அரசிடம் முறையிட்டு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் முல்லை பெரியாறும் வறண்டு விடும் அபாயம் உள்ளது. இவ்வாறு கூறினர்.