மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள் எச்சரிக்கை..!

முல்லைப் பெரியாறு அணையின் மீது கை வைத்தால் கேரள மாநிலம் மிகப்பெரிய பொருளாதார இழப்புகளை சந்திக்க நேரிடும்.?

Update: 2024-05-24 16:10 GMT

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் விடுத்துள்ள அறிக்கை:


எப்படியாவது முல்லைப் பெரியாறை வைத்து கேரள மாநிலத்தில் அரசியல் செய்ய வேண்டிய நிலைமை இன்றைக்கு இடதுசாரிகளுக்கு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தோழர் பினராயி விஜயன் நினைப்பது போல,முல்லைப் பெரியாறு அணை மீது கை வைத்தால், கொஞ்ச நாளைக்கு தமிழர்கள் போராடுவார்கள். பின்னர் வழக்கம் போல இதையும் கடந்து போவார்கள் என்று நினைக்கக்கூடும்.

ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் மானப் பிரச்சனையாக உருவெடுத்து நிற்கிறது முல்லைப் பெரியாறு அணை. போகிறபோக்கில் அணை மீது கை வைக்கலாம் என்று தோழர் பினராயி விஜயன் நினைத்தால், அது கடந்தை கூட்டில் கை வைப்பது போன்றதாகும் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்ற மாநிலமாக கேரளா இருக்கலாம். ஆனால் கட்டமைப்புகளுக்கு தேவையான அத்தனையையும், வாழ்வியலுக்கு தேவையான அத்தனையையும் அவர்கள் தமிழகத்திடமிருந்து தான் பெற முடியும். இது இயற்கை வகுத்த நியதி.

வெறுமனே தண்ணீருக்காக மட்டுமே தமிழகம் கேரளத்தைச் சார்ந்திருக்கிறது என்று அங்குள்ள நல்லவர்களுக்கு தெரியும். ஆனால் கடுகு, கத்தரிக்காய் முதல், கட்டுமானத்திற்கு தேவையான சிமெண்ட், எம் சாண்ட், ஜல்லிகள் இங்கிருந்து தான் செல்ல வேண்டும்.

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாறசாலை வழி, செங்கோட்டை வழி, அச்சங்கோவில் வழி, குமுளி வழி, கம்பம் மெட்டு வழி, போடி மெட்டு வழி, உடுமலை-மூணாறு வழி, கொழிஞ்சாம்பாறை-பாலக்காடு வழி, ஆனைகட்டி- அட்டப்பாடி வழி, வாளையார் வழி, வால்பாறை- சாலக்குடி வழி, நிலம்பூர் வழி, நாடுகாணி வழி, தாழூர் வழி என அத்தனை வழித்தடங்களையும் 10 நாட்களுக்கு தமிழகம் இழுத்துப்பூட்டினால் கேரளா ஸ்தம்பிக்கும் அபாயம் இருக்கிறது என்பதை தோழர் பினராய் விஜயனுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

கேரளத்தில் ஒரு சிமெண்ட் ஃபேக்டரி கூட இல்லாத நிலையில், கேரள மாநிலம் முழுக்க முழுக்க சிமெண்ட் தேவைக்கு தமிழகத்தை மட்டுமே நம்பி இருக்கிறது.  தனக்குத் தேவையான அரிசியில் அது உற்பத்தி செய்வது 26 விழுக்காடு மட்டுமே. பாலக்காடு மற்றும் ஆலப்புழா- குட்டநாடு மட்டுமே கேரளாவில் நெல் உற்பத்திக்கான கேந்திரங்கள். வெறும் காபி ரப்பர் தேயிலையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு சமூகம் அல்லது ஒரு மாநிலம் தன்னிறைவு பெற்று விட முடியாது. அது பிறரைச் சார்ந்து தான் தன்னுடைய வாழ் நிலையை அமைத்துக் கொள்ள முடியும்.

இயல்பாக 1979 ல் அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த எம் ஜி ஆர், கேரள முதல்வர் அச்சுதமேனனை அழைத்து முல்லைப் பெரியாறு அணையை தாரை வார்த்த காலமல்ல இது. கூடுதலாக ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு என்கிற விவிலியத்தின் வாசகத்தை பின்பற்றக்கூடிய காலமுமல்ல இது.

தன் வயிற்றில் அடிப்பவனை நோக்கி முஷ்டியை உயர்த்தும் காலத்தில் வாழ்கிறோம் என்பதை கேரள மாநில முதல்வர் மறந்து விடக்கூடாது. ஒரு எடுத்துக்காட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் செங்கோட்டை- புனலூர் வழித்தடத்தில் நாளொன்றிற்கு 3000 முதல் 3 ஆயிரத்து 500 வண்டிகள் வரை கேரளாவை நோக்கிச்  செல்கிறது.

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வண்டிகளில் ஒன்று அங்குள்ள மருத்துவ கழிவுகள், காய்கறி கழிவுகள் வரலாம். அதுபோக தீப்பெட்டி செய்வதற்கு தேவையான ரப்பர் குச்சிகள் வரலாமே தவிர முழுக்க முழுக்க வெற்று வண்டிகளாகத்தான் தமிழகம் திரும்புகிறது. தமிழகத்திலிருந்து பாரம் ஏற்றிச் செல்லும் வண்டிகள் அனைத்தும்.

இதே அளவு வண்டிகள் குமரி மாவட்டத்தில் பாறசாலை வழியாகவும், குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாகவும், கொழிஞ்சாம்பாறை, வாளையார் வழியாகவும் கேரளாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எல்லா வழித்தடயங்களையும் அன்றி, குறிப்பிட்ட ஏழு வழித்தடங்களை அடைத்தாலே கேரளாவில் உணவு பற்றாக்குறை ஏற்படக்கூடிய அளவிற்கு நிலைமை வரும்.

இடுக்கி அணையில் மின்சாரம் எடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே முல்லைப் பெரியாறு அணை மீது கை வைக்கும் கேரளாவின் நரித்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் இன்றுள்ள தமிழகத்து இளைஞர்கள்.

காய்கறி உற்பத்தியில் தன்னிறைவு பெறவில்லை கேரளா. அரிசியில் தன்னிறைவு பெறவில்லை கேரளா. சிமெண்ட் உற்பத்தியே கிடையாது. அவர்கள் நுகரும் பாலில், அவர்களால் உற்பத்தி செய்யப்படுவது 45 விழுக்காடு மட்டும் தான். மீதி தமிழகத்திலிருந்து தான் செல்கிறது.

கட்டுமானத்திற்கு தேவையான கனிம வளங்களில் 72% தமிழகத்தில் இருந்து தான் இன்றைக்கு கேரளாவிற்கு சென்று கொண்டிருக்கிறது. பெரிய அளவிற்கு நெல் உற்பத்தி கேரள மாநிலத்தில் இல்லாததால் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் தமிழகத்தில் இருந்து தான் செல்ல வேண்டும். தோராயமாக கேரளாவிற்கு தேவைப்படும் வைக்கோலில் 70 விழுக்காடு தமிழகத்திலிருந்து தான் சென்று கொண்டிருக்கிறது.

ராம்கோ சிமெண்ட், சங்கர் சிமெண்ட், செட்டிநாடு சிமெண்ட், டால்மியா சிமெண்ட் என தமிழகத்தில் செயல்படும் சிமெண்ட் கம்பெனிகள், 10 நாட்களுக்கு கேரளாவிற்கு சிமெண்ட் அனுப்புவதை நிறுத்தினாலே மொத்த கட்டுமானமும் முடங்கும் அபாயத்தில் இருக்கிறது கேரளா.

தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் திரட்டி இந்த சிமெண்ட் கம்பெனிகளுக்கு முன்பு நாங்கள் போராட எத்தணித்தால், கேரளாவிற்கு சிமெண்ட் செல்லுமா என்பதை தோழர் பினராய் விஜயன் உணர வேண்டும். கேரளாவில் உள்ள மனித வளத்தில் தமிழகத்தின் பங்கு 30 முதல் 35 % வரை இருக்கக்கூடும். முல்லைப் பெரியாறு அணையின் மீது கை வைத்து அந்த மனித வளத்தை இழக்க விரும்புகிறதா கேரளா என்பது நமக்கு தெரிய வேண்டும்.

கூடுதலாக 1956 மொழிவழி பிரிவினையின் போது, தமிழகம் கேரளாவிடம் இழந்த பகுதிகளை,நாங்கள் திரும்ப கேட்டு போராட ஆரம்பித்தால், தோழர் பினராய் விஜயனால் தாங்க முடியுமா...? 2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையின் போது, இடுக்கி மாவட்டம் மூணாறில் எங்களால் நடத்தப்பட்ட முல்லைப் பெரியாறு ஆதரவு பிரசார ஊர்வலத்தை கேரளா மறந்துவிட்டதா...?

முல்லைப் பெரியாறு அணையின் மீது கேரளா கை வைக்கும் பட்சத்தில், எல்லை பிரச்சனைகள் தமிழகம் முழுவதும் வெடித்து கிளம்பும் என்பதையும் தோழருக்கு அறிவுறுத்தலாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். குமுளி எல்லை வரை போராட்டத்தை நாங்கள் நடத்துவோம். குமுளி தொட்டு வண்டிப்பெரியாறு பீரிமேடு முண்டக்காயம் வரை அங்குள்ள தமிழர்கள் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.

தயவுசெய்து உங்களுடைய அறிக்கையை திரும்பப் பெற்று இரு மாநில உறவை பேணுவதற்கு தயாராகுங்கள் தோழர் அவர்களே...!!! களத்தில் எங்களைப் போன்றவர்களை இறக்கி விட்டு விட்டு, குளவி கூட்டில் கை வைத்த நிலைமைக்கு தள்ளப்பட்டு விடாதீர்கள். பொருளாதார ரீதியாக அரபு நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் கிழக்கு ஆசிய நாடுகளும் உங்களுக்கு கை கொடுக்கலாம்.

ஆனால் கத்தரிக்காயும் தக்காளிப் பழமும் தமிழகத்திலிருந்து தான் வர வேண்டும். 2011 காலகட்டத்திற்கு மறுபடியும் எங்களை அழைத்துச் சென்று விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன் தோழர் பினராய் விஜயன் அவர்களே...!!!. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News