போட்டித்தேர்வு மாணவர்களுக்கு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நுாலகம் வரப்பிரசாதம்

அரசு போட்டித்தேர்வுகள் எழுதும் மாணவர்கள் படிக்க இந்த நுாலகத்தில் 30 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன

Update: 2023-07-18 01:15 GMT

மதுரையிலுள்ள கலைஞர் நினைவு நூலகம் (பைல் படம்)

போட்டித்தேர்வு மாணவர்களுக்கு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நுாலகம் வரப்பிரசாதம்.இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி புவனேஷ்வரம் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மதுரையில் தமிழக முதல்வர் திறந்து வைத்த கலைஞர் நினைவு நூலகத்தின் நான்காவது தளத்தில் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர்கள், இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் ஏறத்தாழ 30000 நூல்களுடன் கூடிய ஒரு தனிப்பகுதி அமைந்துள்ளது.

அது 1983 ஆம் ஆண்டு. மதுரையில் தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே குடிமைப் பணிக்குத் தயாராகி வந்தேன். மதுரையில் நத்தம் சாலைக்கு செல்லும் வழியில் மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் நகர் நூலகச் சிறுவளாகம். எனது பணிச்சூழலில் அந்த நூலகம் மட்டுமே எனக்கு போக வர வசதியாக இருந்தது. அப்போது நத்தத்தில் இருந்து மதுரைக்கு தினமும் பயணித்து மூன்று ஷிப்டுகளில் மாறி மாறி பணியாற்றினேன். இதில் ஷிப்டை பொறுத்து வாரத்தில் ஓரிரு நாட்கள் நூலகம் செல்லமுடியும்.

நான் தமிழ் வழியில் தேர்வு எழுத முடிவுசெய்து அதற்காகத் தயாராகி வந்தேன். அறிவியல், பொது அறிவு, வரலாறு போன்ற தேர்வுகளுக்கு பயன்படக்கூடிய நூல்கள் தமிழில் குறைவாகவே இருந்தன. தமிழ்நாடு பாடநூல் நிறுவன வெளியீடுகள் மிகவும் உதவியாக இருந்தது. ஆங்கிலத்தில் நூல்களைப் படித்து தமிழில் குறிப்பெடுப்பேன். தமிழில் கலைச்சொற்களை துறைவாரியாக தயாரித்துக் கொண்டேன் தேர்வில் பயன்படுத்த வசதியாக குடிமைப் பணி தேர்வு எழுதுவோர்க்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் நூல்கள் (NCERT) பயனுள்ளதாக இருக்கும் என்றார்கள். மதுரை டவுன் ஹால் சாலையில் ஒரு கடையில் சில நூல்கள் கிடைத்தன. எனக்கு வேண்டிய நூல்கள் அனைத்தும் கிடைக்கவில்லை.

இந்த நூல்களை வாங்கி வருவதற்காகவே சென்னைக்குச் சென்று புத்தகக்கட்டுடன் மறுநாள் மதுரைக்கு திரும்பிய ரயில் பயணம் எனக்கு இன்னும் மறக்கவில்லை. குடிமைப் பணி தேர்வுக்கு படிப்பவர்கள் Competition Success Review என்ற மாதாந்திர இதழை வாங்கிப்படிப்பது வழக்கம். எனக்கு தெரிந்து இந்த இதழ் மதுரையில் இரண்டே இரண்டு கடைகளில் கிடைக்கும். அந்த இரண்டு கடைகளில் ஒன்று தல்லாகுளத்தில் தமுக்கம் மைதானம் சந்திப்பில் உள்ள ஒரு பெட்டிக்கடை. அந்த இதழ் வரும் நாளை எதிர்நோக்கி காத்திருந்து வாங்கிச் செல்வேன்.

சில தருணங்களில் குறிப்பிட்ட நாளில் அந்த மாத இதழ் வந்து சேர்ந்திருக்காது. நாளைக்கு ஒருவேளை வரக்கூடும் என்பார் கடைக்காரர். எனக்குத் தேவையான ஒரு நூலைப் படிப்பதற்காக ஒருமுறை காரைக்குடி அழகப்பா கல்லூரி நூலகம் சென்று காரைக்குடியில் ஒரு நாள் தங்கி குறிப்பெடுத்து வந்தேன். மற்றபடி எனக்கு உற்றதுணை யாதவர் கல்லூரி நூலகம். நான் அங்கு இளங்கலை படித்து பின்னர் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து பிறகு நாளிதழில் பணியாற்றினாலும் யாதவர் கல்லூரி தொடர்பு விட்டுப் போகவில்லை. எனக்கு தேவையான நூல்களை அங்கிருந்து வாங்கிச் சென்று படிக்க முடிந்தது.

அப்போது யாதவர் கல்லூரி நூலகத்தின் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற முனியசாமியுடன் சென்ற ஆண்டு கூட அலைபேசியில் பேசினேன். இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன். ஏன் எழுதுகிறேன். கலைஞர் நூலகத்தில் போட்டித் தேர்வர்களுக்கு தனித்தளம். முப்பதாயிரம் நூல்கள் என்பது எவ்வளவு இனிப்பான செய்தி தெரியுமா? இப்போதெல்லாம் விரல் நுனியில் இணைய வலைத்தளங்களில் தகவல் களஞ்சியம். ஆனால் அது வேறொரு காலம். திரும்பிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது!

1984 இல் குடிமைப் பணியில் சேர்ந்து 2018 இல் ஓய்வுபெற்று அதன் பின்னரும் ஒடிசா மாநில அரசில் முதல்வர் அலுவலகத்தில் தலைமை ஆலோசகராக முழுநேரப் பணியில் இப்போதும். மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்தில் ஒரே தளத்தில் போட்டித் தேர்வர்களுக்கு பயன்படக்கூடிய முப்பதாயிரம் நூல்கள். அடேங்கப்பா . அப்படியென்றால் நூல்கள் வாங்க சென்னைக்கு போக வேண்டாமா? மாத இதழுக்காக கடை அருகே காத்திருக்க வேண்டாமா?

ஆசையாக இருக்கிறது! இந்த நான்காவது தளத்தில் அமர்ந்து படித்து இன்னும் ஒரு முறை குடிமைப்பணி தேர்வு எழுதி மீண்டும் ஒரு முறை முதல் முயற்சியில் வென்று காட்ட! அப்படி என்ன வயசாகி விட்டது எனக்கு 64+ தானே! ( Don't get tensed up. சும்மா தான் சொன்னேன்.!).வாழ்த்துகள். இளைய தலைமுறையே! கல்வி தான் நம்மைக் கரைசேர்க்கும்.அறிவு தான் நமது பேராயுதம்!"அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்"என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் அன்று சொன்ன சொல் இன்றும் செல்லும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News