கண்ணகி கோயிலை மீட்டுத்தர தேனி கலெக்டருக்கு விவசாயிகள் கடிதம்
தமிழக எல்லையில் உள்ள கண்ணகி கோயிலை முழுமையாக கேரள அரசின் பிடியில் இருந்து மீட்டுத்தர பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்;
தேனி மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் மங்கலதேவி கண்ணகி கோவில், கிட்டத்தட்ட 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தொல்லியல் துறையின் திருச்சூர் வட்ட நிர்வாகத்தின் கீழ் வரும் கண்ணகி கோவிலை, முற்றிலும் தமிழகத்திற்கு சொந்தமானது என்று, பிரிட்டிஷ் கெஜட், ஜமீன் பட்டாக்கள் மற்றும் யூ டி ஆர் அடிப்படையிலும் பலமுறை நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது.
1976 ஆம் ஆண்டு உத்தமபாளையம் சர்வேயரால் வரைவு செய்யப்பட்ட வரைபடத்திலும் கண்ணகி கோவில் தமிழக எல்லைக்குள் தான் வருகிறது. ஆனால் திடீரென 1800 ஆண்டுகள் பழமை கொண்ட, தமிழகத்திற்கு சொந்தமான மங்கலதேவி கண்ணகி கோட்டத்தை, எங்களுக்கு சொந்தமானது என்று கேரள மாநில அரசு சொன்னது.
அது நீண்ட கால முயற்சியின் தொடக்கம். சொல்லிக் கொள்ளும் படியாக தங்கள் மாநிலத்தில் பண்பாட்டு அடையாளம் எதுவும் இல்லாத நிலையில், கேரள மாநில அரசுக்கு தேவைப்பட்டது கண்ணகி கோவில் என்கிற பண்பாட்டு துருப்புச்சீட்டு. அதற்காகவே அவசர அவசரமாக குமுளியிலிருந்து கண்ணகி கோவிலுக்கு சாலை அமைத்தார்கள். அந்தச் சாலை மட்டும் இல்லையென்றால் கண்ணகி கோவிலுக்கும் கேரளாவிற்கும் சம்பந்தம் இல்லாமலே போயிருக்கும்.
அவசரகதியில் அள்ளித் தெளித்து போடப்பட்ட அந்த சாலைக்கு பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது. கேரளாவின் இந்த சதியை உணர்ந்து கொள்ளாமல், அவர்களிடமே சரணாகதி அடைந்து, கோவிலைக் கட்டித் தாருங்கள் என்று கண்ணகி அறக்கட்டளை என்றொரு அமைப்பு களத்திற்கு வந்தது. தமிழகத்தில் கம்பத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் கண்ணகி அறக்கட்டளை, கண்ணகி கோவிலை கேரள மாநில அரசு சீரமைக்க வேண்டும் என்று, கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
கடந்த 2014 ஆம் ஆண்டு கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அந்த அறக்கட்டளை, கேரள மாநில அரசு கோவிலை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. நிலவியல் ரீதியாக தமிழக எல்லைக்குள் வரும் தொல்லியல் பழமை வாய்ந்த ஒரு கோவில் குறித்த வழக்கை, எந்த அடிப்படையில் கேரள மாநில உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது என்பது தெரியவில்லை.
நான்காண்டுகள் நடந்த வழக்கின் இறுதியில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் கோவிலை, கேரள மாநில அரசு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது கேரள உயர் நீதிமன்றம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கான இறையாண்மை இருக்கிறது என்று இந்திய அரசியலமைப்பு உறுதிப்படுத்துகிறது. அப்படியானால் தமிழகத்திற்கு என்று ஒரு இறையாண்மை இருக்கிறது என்பதை இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கவே செய்கிறது.
இது குறித்து இச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தேனி கலெக்டர் சஜீவனாவிற்கு எழுதிய கடிதத்தில். தமிழக இறையாண்மையை கேள்விக்குறியாக்கிய கேரள மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவை, இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
கோவில் தமிழக எல்லைக்குள் இருக்கும் நிலையில் கேரளாவிற்கு சென்று ஒரு அறக்கட்டளையால் வழக்கு தொடுக்க முடியுமா...? கேரள உயர்நீதிமன்றம் கண்ணகி கோவில் மறுகட்டுமானத்திற்காக நிதி ஒதுக்கச்சொல்லி, கேரள மாநில அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், அறக்கட்டளையை சேர்ந்த, அன்றைக்கு தமிழக அரசுப் பணியில் இருந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி, எருமேலிக்கு சென்று கேரள தேவசம்போர்டு அமைச்சராக அன்றைக்கு இருந்த கடகம்பள்ளி சுரேந்திரனை சந்தித்து, கோவில் மறு கட்டுமானம் தொடர்பாக கேரள மாநில முதல்வரை சந்திக்க அனுமதி கேட்க, அடுத்த நிமிடமே அனுமதி கொடுக்கப்பட்டதோடு, தேவசம்போர்டு அமைச்சருடன் சென்று,கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை சென்று சந்தித்தார்.
அந்த ஐஏஎஸ் அதிகாரியும், அவருடன் இருந்த அறக்கட்டளை நிர்வாகிகளும். தமிழக அரசின் அனுமதி ஏதுமின்றி இவ்வாறு சந்தித்தனர். ஒரு மாநிலத்தின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் இந்த செயலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கைக்கு தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும்.
ஒரு மாநிலத்தின் பண்பாட்டு தொட்டிலாக விளங்கும் கண்ணகி கோவில் குறித்த நடவடிக்கைகளை, ஒரு அறக்கட்டளை தீர்மானித்தது பெரிய வருத்தமான விஷயம். கேரள மாநில முதல்வர் முன்னிலையில், மங்கலதேவி கண்ணகி கோவில் கூட்டமைப்பு என்றொரு கூட்டமைப்பும் சட்டப்படியாக உருவாக்கப்பட்டு, அதற்குத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியும், செயலாளராக கேரளாவைச் சேர்ந்த பத்மகுமாரும் நியமிக்கப்பட்டார்கள்.
இந்த நியமனம் எந்தச் சட்ட விதிகளின் கீழ் செய்யப்பட்டது என்பதை குறித்து அறிய தகுந்த விசாரணையை கலெக்டர் நடத்த வேண்டும். ஒரு மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரி, துறை சார்ந்த அனுமதி ஏதுமின்றி , சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி ஏதுமின்றி இன்னொரு மாநிலத்தில் ஒரு குழுவின் தலைவராக, அம்மாநில முதல்வரால் நியமனம் செய்ய முடியுமா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
ஒரு அரசு ஊழியராக, அதுவும் உயர் மட்ட ஊழியராக இருக்கும் ஒருவர் செய்யும் இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காததாலேயே, கேரள மாநில அரசின் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை சார்ந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்கள்.
இரண்டு மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தில், தொட்டால் தீப்பற்றிக் கொள்ளும் ஒரு பிரச்சனையில், உயர்ந்த அரசுப் பணியில் இருக்கும் ஒருவர், ஒரு அறக்கட்டளை மூலமாக இன்னொரு மாநிலத்திற்கு சென்று ஒப்பந்தம் போட முடியுமா...? முழுக்க தமிழக வனப்பகுதிக்குள் இருக்கும் கோயிலை, முழுமையாக கேரளாவில் இருப்பது போல் எழுதிக் கொடுத்த அறக்கட்டளைக்கு, அந்த அதிகாரத்தை கொடுத்தது எவ்வளவு பெரிய வேதனையான விஷயம்.
இதையெல்லாம் தாண்டி தொல்லியல் துறை போட்ட சில கட்டுப்பாடுகளால், கேரள மாநில அரசால் கண்ணகி கோவிலில் எந்த கட்டுமான வேலையையும் செய்ய முடியவில்லை. கேரள மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத இடதுசாரி அரசை கண்டித்த அறக்கட்டளை குழுவினர், உச்ச நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுத்தார்கள்.
அந்த மனுவில் அறக்கட்டளை மனுதாரர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 63 ஆண்டுகளாக கோவில் இருக்கும் இடம் கணக்கெடுக்கப்படாமல் உள்ள வனப் பகுதியில் உள்ளதாகவும், அந்த இடத்தில் நிலத்தகராறு இருப்பதாகவும் கூறியிருக்கிறார் தகராறு யார் யாருக்கு இருக்கிறது என்பதை ஏன் வழக்கில் குறிப்பிடவில்லை?
இப்படி பல்வேறு சிக்கல்கள் கண்ணகி கோவில் தொடர்பாக இருக்கும் நிலையில், திடீரென இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக இந்து சமய அறநிலையத்துறை, கண்ணகி கோவிலை கைவசப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது. இந்த நிலையில் கண்ணகிக்கு உகந்த சித்திரை முழு நிலவு நாள் வர இருக்கிறது. அந்த நல்ல நாளில், அறக்கட்டளை என்கிற பெயரிலோ தனி மனித ஆதிக்கத்தையோ கண்ணகி கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது.
ஸ்டார்ட்-அப் துறையில் நிபுணத்துவம் பெற்று, தமிழக முதல்வரால் கொண்டாடப்பட்ட தாங்கள் கண்ணகி கோயில் விஷயத்தில் தங்களுக்கு உட்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, உரிய நடவடிக்கை எடுத்து, அந்த பாரம்பரிய சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.