கீதையை ஒரே பாடலில் கொண்டு வந்த பிறவிக் கவிஞர் கண்ணதாசன்

1964-ல் பிஆர்.பந்துலு தயாரித்து இயக்கி வெளியிட்ட கர்ணன் படம் ரூ. 40 லட்சம் செலவில் எடுக்கப்பட்டது;

Update: 2023-01-10 03:30 GMT

பைல் படம்

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஆந்திராவின் வெற்றி நாயகன் என். டி. ராமாராவ், தேவிகா, சாவித்திரி, அசோகன் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்த மாபெரும் திரைக்காவியம் கர்ணன். இப்படத்துக்கு விஸ்வனாதன்-ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்தனர்.

படம் திருப்திகரமாக வளர்ந்து வந்தது. படப்பிடிப்பு முடியும் தருவாய். தயாரிப்பாளர்-இயக்குனர் பிஆர். பந்துலுவுக்கு ஒரு விநோதமான யோசனை தோன்றியது. கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு உரைக்கும் கீதோபதேசக் காட்சியை முழுமையாகப் படமாக்க வேண்டும். செலவு பற்றிக் கவலையில்லை என்றார். இதைக் கேட்ட  அசிஸ்டெண்ட் டைரக்டர்களுக்கு அதிர்ச்சி. கீதை உபதேசக் காட்சியை எவ்வளவு சுருக்கமாக எடுத்தாலும் இருபது நிமிடங்களுக்கு மேலே ஆகிவிடும். கதையோட்டத்திற்குப் பெரும் தடையாக இருக்கும். படம் பார்ப்பவர்களுக்கும் ஆர்வம் இருக்காது. எழுந்து வெளியே சென்று விடுவார்கள் என பல்வேறு காரணிகளை  சொல்லிப் பார்த்தார்கள். படத்தின் வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமி வந்து அவர் பங்குக்கு அவரும் சொல்லிக் பார்த்தார். 

ஆனால் பந்துலு அசைந்து கொடுக்கவேயில்லை. இதனால் Pall of Gloom என்பார்களே அது போன்ற இறுக்கமான சூழ்நிலை பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்தில் வியாபித்திருந்தது. அந்தச் சமயத்தில்தான் இசையமைப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.விஸ்வநாதன் அங்கு வந்தார். துணை இயக்குனர்கள் அந்த இக்கட்டான நிலையை அவரிடம் எடுத்துச் சொன்னார்கள். விஸ்வநாதன், 'அவ்வளவுதானே, கீதை உபதேசக் காட்சியை நன்றாக எடுத்துவிடலாம் என்றார். மற்றவர்கள் அவருடைய முகத்தைப் பார்த்தனர் நம்பிக்கை சிறிதுமின்றி. பந்துலு வந்தார். விஸ்வநாதன் அவரிடம்  கீதா உபதேசக் காட்சியை எடுக்க வேண்டும், அவ்வளவுதானே. எளிதாகச் செய்துவிடலாம். கண்ணதாசனிடம் சொல்லுங்கள். ஒரே பாடலில் பகவத் கீதை முழுவதையும் சொல்லிவிடுவார் என்றார்.

கண்ணதாசனிடம் இதைக் கூறியதும் மறுநாளே பகவத்கீதை பாட்டை எழுதிக்கொடுத்து விட்டார், பாமரனுக்கும் புரியும்படியான வார்த்தைகளில். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அந்தப் பாடல் பெரும் வெற்றியடைந்தது. மூன்றரை நிமிடப் பாடலில் பகவத் கீதை முழுவதையும் சொல்லிவிட்டார் கவியரசர் கண்ணதாசன். பந்துலுவுக்குப் பரம சந்தோஷம். இதோ அந்தப் பாடல்:

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா...மரணத்தின் தன்மை சொல்வேன்...!மானிடர் ஆன்மா மரணமெய்தாது...மறுபடி பிறந்திருக்கும். மேனியைக் கொல்வாய்!வீரத்தில் அதுவும் ஒன்று.நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனிவெந்துதான் தீரும் ஓர் நாள்... ஆ... ஆ...என்னை அறிந்தாய் ! எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய் !

கண்ணன் மனது கல் மனதென்றோ காண்டீபம் நழுவ விட்டாய்!  மன்னரும் நானே! மக்களும் நானே!மரம் செடி கொடியும் நானே! சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்... துணிந்து நில் தர்மம் வாழ... ஆ...புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்  போகட்டும் கண்ணனுக்கே! கண்ணனே காட்டினான்! கண்ணனே தாக்கினான்! கண்ணனே கொலை செய்கின்றான்! காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக! இக்களமெலாம் சிவக்க வாழ்க... ஆ... ஆ... ஆ... பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே...

Tags:    

Similar News