என்எல்சி அதிகாரிகளை வறுத்தெடுத்த நீதிபதி: தேனி விவசாயிகள் கொண்டாட்டம்

‘‘இவரல்லவா நீதிபதி. மனிதநேயம் கொண்ட மாமனிதர்’’ என தேனி விவசாயிகள் நீதிபதி தண்டபாணியை கொண்டாடி வருகின்றனர்.

Update: 2023-07-30 04:16 GMT

விவசாயிகளுக்காக கண்ணீர் வடித்த நீதிபதி தண்டபாணி.

நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியின்போது, அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிரிட்ட நிலத்தினை அதிகாரிகள் அழித்ததால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இது குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி ஒருபடி மேலே சென்று  ‘தமிழக அதிகாரிகளை வறுத்தெடுத்தார்‘. அவர் இது பற்றி வழங்கிய தீர்ப்பில், இத்தனை ஆண்டுகள் காத்திருந்த உங்களால் ‘அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா? நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்காக, பயிரிட்ட நிலத்தில் நெற்பயிர்களை புல்டோசரால் அழித்ததை பார்த்த போது எனக்கு அழுகை வந்தது. ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலாரின் ஊருக்கு அருகிலேயே இந்த நிலைமையா. நிலம் எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் பயிர்கள் அழிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

அமெரிக்காவில் அரிசி வாங்க மக்கள் அலைமோதுகின்றனர். இங்கும் அதுபோன்ற சூழல் வரக்கூடும். நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்கப் போகிறோம். அரிசிக்கும், காய்கறிக்கும் அடித்துக்கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத்தான் போகிறோம். மக்கள் பஞ்சத்தில் வாடும் போது, நிலக்கரி பயன்படாது.

மேற்கு தொடர்ச்சி மலையில் கை வைத்தால் தமிழகத்துக்கான பருவமழை சுத்தமாக நின்று விடும். மக்கள் பாதிக்கப்படுவதை அரசு அதிகாரிகளும் புரிந்து கொள்வது இல்லை. இயந்திரத்தனமாக செயல்படுகின்றனர் என்று விளாசித்தள்ளினார்.

இவரின் இந்த பேச்சு ஒட்டுமொத்த செய்தி ஊடகங்களையும் புரட்டி போட்டது. ஆமாம் அனைத்து ஊடகங்களும் நீதிபதி தண்டபாணியை கொண்டாடி மகிழ்ந்தன. தேனி மாவட்ட விவசாயிகள் ஒரு படி மேலே போய், ‘மக்களின் மனசாட்சியாக, விவசாயிகளின் தோழனாக நீதி அரசர் தண்டபாணி செயல்பட்டிருக்கிறார். என கொண்டாடி வருகின்றனர்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறுகையில், ‘நீதிபதி தண்டபாணியின் பேச்சும், செயலும் இந்த மண்ணில் இன்னும் மனிதநேயம் உயிர்வாழ்கிறது என்பதற்கான சான்றாக உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவுக்குரல் நீதிமன்றத்திலேயே ஒலிக்கத்தொடங்கியது பெரும் மனஆறுதலை கொடுத்துள்ளது. இந்த நீதிபதி போன்ற மனச்சாட்சி உள்ள மனிதர்களால், நிச்சயம் விவசாயம் மீண்டும் பிழைக்கும்’ என அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News