பென்னிகுவிக் பேரன் கேரள அரசுக்கு சவால்..!

பெரியாறு அணையின் பலம், பலவீனம் பற்றி வெளிப்படையான விவாதம் நடத்தலாம் வாருங்கள்.

Update: 2024-07-03 05:20 GMT

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.

செய்திக்குள் செல்வதற்கு முன்னர் ஒரு சிறிய தகவல். பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் பெரியாறு அணையின் வரலாறு பற்றி தெள்ளத்தெளிவாக தெரியும்.

எனவே இந்த அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னி குவிக்கினை தங்களது தாத்தா என வர்ணித்து வருகின்றனர். நாங்களெல்லாம் அவரது பேரன்கள் என கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி என பலமுறை கூறியுள்ளனர். தங்கள் குடும்பத்தின் மூதாதையராகவே பென்னிகுவிக்கினை கருதி, அவருக்கு அங்கீகாரம் அளித்து கெண்டாடி வருகின்றனர்.

sபென்னிகுவிக் ஆன்மா பெரியாறு அணையினை பாதுகாத்து வருவதாகவும், அந்த அணைக்கு எதிராக செயல்படுபவர்களை அந்த ஆன்மா ஒன்றுமில்லாமல் அழித்து விடுவதாகவும் பல சம்பவங்களை உதாரணமாக கூறி உறுதிப்படுத்தியும் உள்ளனர். எனவே தான் இந்த செய்தியில் இப்படி ஒரு தலைப்பு கொடுக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. மற்றபடி உணர்வுப்பூர்வமான இந்த விஷயத்தை யாரும் கிண்டல் என தவறாக எண்ணி விட வேண்டாம். இனி செய்திக்கு வருவோம்.

பெரியாறு அணையினை கட்டிய கர்னல் பென்னிகுவிக்கின் பேரனும், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளருமான ச.அன்வர்பாலசிங்கம், கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கேரளா காங்கிரஸ் (மானி) பிரிவில், இடுக்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறீர்கள். அடிப்படையில் மறைந்த தலைவர் மானியின் சொந்த ஊரான பாலாவை சேர்ந்த நீங்கள், இடுக்கிக்கு இடம் பெயர்ந்து சட்டமன்ற உறுப்பினரும் ஆகிவிட்டீர்கள்.

பரவாயில்லை, ஆனால் சமீப காலங்களாக முல்லைப் பெரியாறு அணை குறித்து நீங்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள், அடிப்படையில் சமூக ஒற்றுமைக்கும், அறிவியலுக்கும், நடைமுறைக்கும் எதிரானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அகில இந்திய பார் கவுன்சிலில் ஒரு வழக்கறிஞராக பதிவு செய்திருக்கும் நீங்கள், கடந்த 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து கொடுத்த தீர்ப்பை ஒரு முறைக்கு இருமுறை திருப்பிப்  பாருங்கள். நேரம் கிடைக்கும் போது தீர்ப்பின் முழு விவரத்தையும் படியுங்கள்.

Legislature, Excutive, Judiciary என வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் ஜனநாயகத்தின் மூன்று தூண்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டம் இயற்றும் இடத்திலும் இருக்கிறீர்கள். ஒரு அமைச்சராக நிர்வாகத்திலும் இருக்கிறீர்கள். கூடுதலாக ஒரு வழக்கறிஞராக நீதித்துறையோடும் தொடர்புடையவராக இருக்கிறீர்கள்.

ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கிடக்கும் மூன்று துறைகளிலும் ஒரு ஆளுமையாக இருக்கும் நீங்கள், முல்லைப் பெரியாறு அணை குறித்து கடந்த வாரம் கேரள சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையவை அல்ல என்பதோடு, மானுட நாகரீகத்தின் சமாதான வரைவியல் கோட்பாட்டுக்கு எதிரானது உங்கள் கருத்து என்பதை அறிதியிட விரும்புகிறேன்.

1976 ஆம் ஆண்டு நீங்கள் கட்டிய இடுக்கி அணையை விட ஏழு மடங்கு சிறிய அணையாக இருக்கிறது எங்கள் முல்லைப் பெரியாறு அணை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அந்த இடுக்கி அணைக்கு தண்ணீர் வரத்து பெரியாற்றை மட்டுமே நம்பி இருப்பதால், முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று கிளம்பி இருக்கிறீர்கள்.

1979 இல் ஆரம்பித்த உங்களுடைய முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான போராட்டம், இந்த ஆண்டோடு 45 ஆண்டுகளை எட்டி இருக்கிறது. ஆனாலும் கூட அணையில் ஒரு சிறு கீறல் கூட இன்று வரை ஏற்படவில்லை என்பதை உங்களுடைய மனம் ஏன் ஏற்க மறுக்கிறது.

ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருந்து கொண்டிருந்த எங்களது பெரியாறு அணையில், இப்போது எப்போதாவது மழை பெய்தால் மட்டுமே நீர் வரத்து ஏற்படுகிறது என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு  புரிய வேண்டியதில்லை.

தெரிந்து கொள்ளுங்கள் அமைச்சரே....

ஆபத்து என்று நீங்கள் அலறுவதற்கு முன்பே முல்லைப் பெரியாறு அணையில் நாங்கள் செய்த வேலைகளை... 1945 ஆம் ஆண்டு நாடு விடுதலை அடைவதற்கு முன்பே அணையின் மையப் பகுதியில் சிமெண்ட் கிரவுட் செய்து ஒரு முறை அணையை பலப்படுத்தி இருக்கிறோம்.

1960 ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை சிமெண்ட் கிரவுட் செய்து எங்களது பெரியாறு அணையைப் பலப்படுத்தி இருக்கிறோம். 1979 ஆம் ஆண்டு மத்திய நீர்வள கமிஷன் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில், 1980 ம் ஆண்டு அணையை பலப்படுத்தும் பணிகள் துவங்கியது.

அதன்படி 12 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அணையை பலப்படுத்தும் பணிகள் துவங்கியது. கான்கிரீட் தொப்பி அமைத்தல், கேபிள் ஆங்கரிங் செய்தல், பிரதான அணையின் கைப்பிடி சுவரை உயர்த்துதல், மூன்று கூடுதல் நீர் போக்கிகள் அமைத்தல், கான்கிரீட் முட்டுச்சுவர் எழுப்புதல், சிற்றணை மற்றும் மண் அணைகளை பலப்படுத்துதல், கருவி தளம் அமைத்தல், மேல்விசை குறைப்பு துளையிடுதல் என்று ஏழு விதமான பணிகளின் அடிப்படையில் வேலைகள் ஆரம்பித்தது.

அதன்படி கான்கிரீட் தொப்பி அமைக்கும் பணிகள் ஒரு கோடியே 31 லட்சம் செலவில் முடிக்கப்பட்டது. இதில் செய்யப்பட்ட காங்கிரீட் கட்டுமானம், உரிய கம்பிகள் மூலம் பழைய அணை கட்டுமானத்துடன் பிணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேபிள் ஆங்கரிங் செய்தல் மூலம், அணையின் மேல் மட்டத்திலிருந்து அடித்தள பாறையில் நான்கு அங்குல விட்டமுள்ள துளைகளைப் போட்டு, அதனுள் 34 அதிக இழவிசை திறனுள்ள ஏழு மில்லி மீட்டர் அளவுள்ள இரும்பு கம்பிகளை சொருகி, இழுவிசை கம்பிகள் பொருத்தப்பட்ட பின் சிமெண்ட் கிரவுட் செய்து, 43 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு அணை வலிமைமிக்கதாக மாறியிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையின் கைப்பிடி சுவரின் மேல்மட்டம் 158 அடியாகும். இந்த சுவரில் மோதும் நீரின் அலைகளை தடுக்க மேலும் இரண்டு அடி உயர்த்தப்பட்டு, மேல்மட்டம் 160 அடியாக உயர்த்தப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் பழைய பத்து நீர் போக்கிகளின் வெளிப்போக்கு திறன் வினாடிக்கு 88 ஆயிரம் கன அடி ஆகும். ஆனால் எதிர்பார்க்கப்படும் உச்ச நிலை வெள்ள வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 22,000 கன அடியாக இருப்பதால், கூடுதல் நீரை வெளியேற்ற, 40 அடிக்கு 16 அடி என்கிற அளவு வீதத்தில் மூன்று நீர் போக்கிகள் கருங்கல்லால் கட்டப்பட்டன. காங்கிரீட்டிலான மற்றொரு வழிந்தோடியும் கட்டப்பட்டது.

கூடுதலாக மூன்று நீர் போக்கிகளிலும் மின் வசதியால் இயங்கக்கூடிய ரேடியல் அடைப்பு ஷட்டர்கள் பொருத்தப்பட்டன. இப்பணிக்கு மூன்று கோடியே 52 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டது.

கூடுதலாக அணைக்கு நிரந்தரமான பலம் கொடுக்கக்கூடிய கான்கிரீட் முட்டுச்சுவர் எழுப்புதல் பணிகளுக்கான வேலை ஆரம்பித்தது. அதன்படி அணையை ஒட்டி பின்புறமாக அடித்தளத்திலிருந்து 54 அடி அகலத்திற்கு காங்கிரீட் முட்டுச் சுவர் எழுப்பி, அதை நடு உயரத்தில் 27.36 அடி அகலத்திற்கு கொண்டு வந்து, பின் அணையின் 145 அடி மட்டத்தில் இணையுமாறு கட்டப்பட்டது.

முட்டுச்சுவர் கட்டுமானத்தினுள் 10 அடி மற்றும் 45 அடிமட்டங்களில் ஆய்வு செய்வதற்காக வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டதோடு, அணையில் இருந்து கசியும் நீர் மற்றும் மேல்விசை நீர் இக்காலரிகளில் சேகரிக்கப்பட்டு, வி நாட்ச் எனும் அளவுகோல் மூலம் கணக்கிடப்படுகிறது இந்த பணிக்கு எட்டு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவானது.

பிரதான அணையை கான்கிரீட் முட்டுக்கொடுத்து பலப்படுத்தியது போல 240 அடி நீளம் உள்ள சிற்றணையும் பலப்படுத்தப்பட்டது. அதற்காக உலக வங்கி மூலம் பெற்ற கடன் மட்டும் ஆறு கோடி ஆகும்.

இதன் தொடர்ச்சியாக பேபி அணைக்கு செல்லும் வழியில் உள்ள 23 காட்டு மரங்களை வெட்டி விட்டு, பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என்று நாங்களும் 45 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம்.

அந்த வேலையை செய்தால் எங்கே முல்லைப் பெரியாறு அணை பலம் நூறு விழுக்காடு ஆகி விடுமோ என்று பயந்து நீங்கள் எங்களை வேலை செய்ய விடுவதில்லை.

கோடிகளைக் கொட்டி வேலை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் நீங்கள் அனுமதிக்காததின் நோக்கம் என்ன என்பதை சொல்ல முடியுமா...?

சராசரியாக எங்கள் முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிக்கு, கடந்த 1979 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை,சுமார் 50 கோடிகளை நாங்கள் செலவழித்து இருக்கக்கூடும்.

ஆனாலும் தென்மேற்கு பருவமழை காலங்களில் பெரியாறு அணைக்கு எதிராக நீங்கள் கக்கும் விஷமப் பிரச்சாரங்கள் இன்று வரை முடிவுக்கு வரவில்லை...

ஒரு வேண்டுகோளை உங்கள் முன்வைத்து நிறைவு செய்கிறேன்...இடுக்கி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். முல்லைப் பெரியாறு அணையின் பலம் என்ன என்று நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம். அதன் பலவீனம் என்ன என்பதை விவாதிக்க நீங்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள், நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம். அந்த விவாதத்தை நிறைவு செய்து விட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நீங்கள் சென்றால் ஜனநாயகத்திற்கு அது பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்று முடிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News