என் நிலத்தில் தண்ணீர் இருக்கா பார்த்து சொல்லுங்க :வேதனையில் விவசாயிகள்
என் நிலத்தில் போர்வெல் வறண்டு விட்டது. தண்ணீர் எத்தனை அடி ஆழத்தில் உள்ளது, பார்த்துச் சொல்லுங்க என விவசாயிகள் புலம்பல்
தேனி மாவட்டத்தில் சின்னமனுாரில் பெரியாற்று நீர் பாயும் பகுதிகள், போடியில் கொட்டகுடி நீர் பாயும் பகுதிகளில் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் சுமாராக உள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் 1000ம் அடிக்கு கீழே சென்று விட்டது.
இதனால் விவசாய பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட போர்வெல்கள் வறண்டு விட்டன. தங்களது போர்வெல்லை இன்னும் எத்தனை அடி ஆழப்படுத்தினால் தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகளுக்கு தெரியவில்லை. இதனால் இவர்கள் நிலத்தடியில் எத்தனை அடியில் தண்ணீர் உள்ளது என்பதை கணக்கிட்டு சொல்லுமாறு தேனி புவியியல் ஆய்வு மையத்தில் மனு கொடுத்து வருகின்றனர்.
விவசாயிகள் இங்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்தினால் அவர்களது நிலத்திற்கு சென்று தண்ணீர் உள்ளதா? இருந்தாலும் எத்தனை அடி ஆழத்தில் உள்ளது என்ற விவரங்களை அதிகாரிகள் பார்த்துச் சொல்லி விடுவார்கள். இப்படி தண்ணீர் ஆழம் பார்த்துச் சொல்லுமாறு நுாற்றுக்கணக்கான விவசாயிகள் மனு கொடுத்து வருகின்றனர்.
தவிர உள்ளாட்சிகளிலும் போர்வெல்கள் வறண்டு விடுவதால், உள்ளாட்சி நிர்வாகங்களும், தங்களது பகுதியில் எந்த இடத்தில் நிலத்தடி நீர் வளம் உள்ளது என பார்த்துச் சொல்லுமாறு மனு கொடுக்கின்றனர். விவசாயிகள் தவிர்த்து மற்றவர்கள் தங்கள் பகுதியில் நீரோட்டம் பார்க்க ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
உள்ளாட்சிகள் இந்த ஆயிரம் ரூபாய் கட்டணத்தை எளிதில் கட்டி விடுகின்றனர். குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளாட்சிகளில் முதலில் நீரோட்டம் பார்த்துச் சொல்லுங்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. எனவே புவியியல் தகவல் மையத்திற்கு போதிய அளவு தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.