கண்ணகி கோயில் செல்ல ரோடு வசதி கிடைக்குமா
தமிழக எல்லைக்குள் தான் கண்ணகி கோயில் அமைந்துள்ளது என பலமுறை நடந்த சர்வேயில் ல் உறுதி செய்யப்பட்டுள்ளது.;
தமிழகத்தின் தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் சந்திக்கும் வண்ணாத்திப்பாறை வனப்பகுதியில் தேனி மாவட்டத்தின் வனஎல்லைக்குள் அமைந்துள்ளது கண்ணகி கோயில். இந்த கோயில் சேரன் செங்குட்டவனால் 2000ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் முகப்பு வாயில் மதுரை மாநகரை நோக்கி அமைந்துள்ளது.
இப்போது தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த மங்கலதேவி கண்ணகி கோயில் மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கண்ணகி கோயிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896 -ல் நடத்திய சர்வேயும், 1913, 1915 -ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976 -ல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது..
இந்த நிலையில் 1976-ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த சாலையை வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறது.
தமிழக அரசு நம் மாநில உரிமையை மீட்க நம் மாநில எல்லை வழியாக *மங்கல தேவி கண்ணகி கோவிலுக்கு* பாதை அமைப்பார்களா என்று தேனி மாவட்ட மக்களும் தமிழக மக்களும் பல வருடங்களாக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். ஒரு வேளை இந்த பாதை அமைக்கப்பட்டால் கண்ணகி கோயில் எல்லைப்பிரச்னையும், வழிபாட்டு பிரச்னையும் முடிவுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது.