பழங்குடியின மக்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை செலுத்திய கலெக்டர்
இனிமேல் ஆண்டுதோறும் இத்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக பணம் கட்ட வேண்டும் என பழங்குடியின மக்களுக்கு அறிவுறுத்தினார்.
தேனி மாவட்டத்தில் செல்லான்காலனி, சிறைக்காடு கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வங்கிகள் மூலம் பிரதமர் காப்பீடு திட்டத்தில் வழங்கப்படும் பாதுகாப்புத்திட்டத்திற்கான பிரீமியம் தொகையினை கலெக்டர் முரளீதரன் செலுத்தினார்.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் 330 ரூபாய் ஆண்டு பிரிமீயம், 12 ரூபாய் விபத்து காப்பீடு பிரீமியம் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. விபத்தில் பலியானாலோ, இயற்கை இறப்பு ஏற்பட்டாலோ வங்கிகள் 4 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்குகின்றன. இந்த திட்டம் பற்றி சிறைக்காடு, செல்லான்காலனி மக்கள் அறிந்திருக்கவில்லை. இந்த கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் முரளீதரன் இந்த திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கி கூறினார். மக்கள் தங்கள் கையில் தற்போது பணம் இல்லை என கூறியதால், வங்கி கணக்கு வைத்திருந்த 68 பேருக்கும் ஓராண்டு பிரீமியம் தொகையினை கலெக்டர் முரளீதரன் செலுத்தினார். மீதம் உள்ளவர்களை வங்கிக்கணக்கு செலுத்தி பிரீமியம் செலுத்த அறிவுறுத்தினார். இனிமேல் ஆண்டுதோறும் இத்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக நீங்கள் பணம் கட்ட வேண்டும் என பழங்குடியின மக்களுக்கு அறிவுறுத்தினார்.
கொரோனா ஊசி போட்டுக்கொள்ள அச்சம் தெரிவித்த பழங்குடியின மக்களிடம், உங்கள் ஊரில் கொரோனா முகாம் நடத்தும்போது நாள் முழுவதும் உங்களுடன் இருப்பதாகவும், எந்த பாதிப்பும் வராது, நானும் தடுப்பூசி போட்டுள்ளேன். நாட்டில் 75 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், அச்சப்படதேவையில்லை என விளக்கிக் கூறினார். இதையடுத்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறோம் என பழங்குடியின மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.