தேனியில் போக்குவரத்து போலீஸ் பற்றாக்குறை : நெரிசலை கட்டுப்படுத்துவதில் தொடரும் சிக்கல்..!

Theni District News -தேனியில் போக்குவரத்து போலீஸ் பற்றாக்குறையால் நகரில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-12-08 05:02 GMT

போக்குவரத்து காவலர் (கோப்பு படம்)

Theni District News -தேனியில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் முதன் முறையாக கடந்த 1980ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதெல்லாம் தேனியில் காய்கறி, பருத்தி கமிஷன் கடைகள், ஓட்டல், டீக்கடைகள், ஓரிரு பாத்திரக்கடைகள் மட்டுமே இருந்தன. நகரம் வளர்ச்சி பெறாத நிலையில் மக்கள் தொகையும் 50 ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது.

நகரின் வீதிகள் 120 அடி அகலத்தில் இருந்தன. மதுரை ரோட்டில் மட்டும் அவ்வப்போது வாகனங்கள் சென்று வரும். பெரியகுளம் ரோட்டில் நேருசிலையில் இருந்து பெத்தாட்ஷி விநாயகர் கோயில் (ரயில்வே கேட்) வரை மட்டுமே கடைகள் இருந்தன. அடுத்து கட்டங்களே இல்லாத விவசாய நிலங்கள் மட்டுமே இருந்தன.

பெரியகுளம் ரோட்டில் 2 கி.மீ., தொலைவினை கடந்தால் அல்லிநகரம் என்ற குடியிருப்பு பகுதி வரும். இடைப்பட்ட இந்த துாரத்தை பெண்கள் நடந்து கடப்பது சிரமம். அந்த அளவிற்கு ஆள் அரவமற்ற நிலை காணப்பட்டது. அப்போதய சூழ்நிலையில் தொடங்கப்பட்ட போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., உட்பட 16 பேர் நியமிக்கப்பட்டனர்.

1996ம் ஆண்டு தேனி மாவட்ட தலைநகராக மாறியதும் நகரம் வளர்ச்சி பெறத்  தொடங்கியது. இன்று கம்பம் ரோட்டில் போடி விலக்கிலேயே நெரிசல் தொடங்கி விடுகிறது. 8 கி.மீ., தொலைவில் உள்ள அன்னஞ்சி வரை நெரிசல் நீடிக்கிறது. மதுரை ரோட்டில் நேரு சிலையில் இருந்து அரண்மனைப்புதுார் வரை நெரிசல் நீடிக்கிறது.

நகரில் வாகனங்களின் பெருக்கம் 100 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. கம்பம், பெரியகுளம், மதுரை ரோடுகள் சந்திக்கும் நேரு சிலை பகுதி எந்த நேரமும் நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதனால் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்ந பகுதியை கடப்பதே பெரும் சிரமம் என்ற நிலை உருவாகி உள்ளது. 

120 அடி அகலம் இருந்த ரோடுகள் வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சி, வாகனங்களின் அதிகரிப்பு, மக்கள் தொகை பெருக்கம் காரணமாக சுருங்கிப்போய், வாகனங்கள் கூட வரிசையாக செல்லும் அளவிற்கு குறுகிப்போனது. நகரின் வளர்ச்சி அபாரமாக பெருகி வரும் நிலையில், போக்குவரத்து போலீஸ் எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது.

இதிலும் விடுமுறை, கோர்ட் பணி, ஸ்டேஷன் பணி போக 4 முதல் 5 பேர் மட்டுமே போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் இவர்களால் நகரில் பெருகி உள்ள நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. அவ்வப்போது சட்டம்- ஒழுங்கு போலீசாரை போக்குவரத்து சீரமைக்கும் பணியில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஈடுபடுத்தி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண நகரில் கூடுதல் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் தொடங்கப்படுவதோடு, போக்குவரத்து டி.எஸ்.பி.,யும் தனியாக நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News