அதிகரிக்கும் நகைபறிப்பு சம்பவங்கள்: பெண்களே உஷார்..
Increasing incidents of jewelery theft
தேனி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 4 இடங்களில் நகை பறிப்பும், ஒரு இடத்தில் திருட்டும் நடந்துள்ளது. அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவங்களால் போலீஸ் நிர்வாகம் உச்சகட்ட அலர்ட்டில் உள்ளது. போலீசார் வாகன சோதனையினையும், இரவு ரோந்தையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா தொற்றுக்கு பின்னர் மிக, மிக அதிக சதவீத குடும்பங்களில் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் உருவாகி உள்ளன. பொருளாதார குற்றங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. இதன் எதிர்விளைவுகள் சமூகத்தில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. குற்றச்சம்பவங்களும் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதனால் பெண்கள் வெளியில் செல்லும் போது நகை அணிந்து செல்ல வேண்டாம். தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் செல்லும் போது மட்டும் பாதுகாப்பான சூழலில் நகை அணிந்து கொள்ளலாம். மற்ற சாதாரண நேரங்களில் நகை அணிந்து வெளியே செல்வதையோ, வேலைக்கு செல்லும் போது நகை அணிவதையோ தவிர்க்க வேண்டும். சிலர் தங்கத்தில் தாலி அணிவதை பெருமையாக கருதுகின்றனர்.
பெண்களின் பாதுகாப்பு கருதி, தாலி அணிந்து செல்பவர்கள் தங்களின் சால் அல்லது சேலை முந்தானையால் பொது இடங்களில் மறைத்துக் கொள்வது நல்லது. பல லட்சம் ரூபாய் போட்டு வீடு கட்டுபவர்கள் தங்கள் வீட்டு முன் ஒரு 40 வாட்ஸ் பல்பு எரிய விடுவதால் எந்த பின்னடைவும் ஏற்படுவதில்லை. மாறாக இரவில் வீட்டு முன் வெளிச்சம் இருந்தால் திருடர்கள் நடமாட்டம் குறையும். அனைத்து வீடுகளிலும் இரவில் வாசலில் ஒரே ஒரு பல்பு எரியவிடுவது நல்லது. அரசாங்கத்தால் அத்தனை ரோட்டுக்கும் முழு அளவில் இரவில் வெளிச்சம் தர முடியாது என்பதை மக்கள் புரிந்து போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.