தடையற்ற குடிநீர் சப்ளை செய்தும் குச்சனுாரில் குடிநீருக்கு தவித்த மக்கள்
தேனி மாவட்டம், குச்சனுாரில் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்தும் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பரிதவித்தனர்;
தேனி மாவட்டம், குச்சனுாரில் 3 வது வார சனிக்கிழமை திருவிழா அதிகாலை 3 மணிக்கு தொடங்கியது. முதல்நாள் நள்ளிரவே பல ஆயிரம் பக்தர்கள் வந்து கோயில் வளாகத்தில் தங்கியிருந்தனர். இவர்கள் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டதும் தரிசனம் செய்ய தொடங்கினர். கடந்த இரண்டு வாரங்களை விட 3வது வார சனிக்கிழமையில் கூட்டம் மிகவும் அதிகம் இருந்தது.
குச்சனுார் பேரூராட்சி முல்லையாற்றின் கரையில் அமைந்துள்ளது. தவிர முல்லையாற்றில் இருந்து வரும் சரயு நதி, (வாய்க்கால்) குச்சனுார் பேரூராட்சியை கடந்து செல்கிறது. இந்த நதிக்கரையில் தான் சுயம்பு சனீஸ்வரபகவான் கோயில் அமைந்துள்ளது. தற்போது முல்லையாற்றிலும், சரயு நதி வாய்க்காலிலும் தண்ணீர் கழிவு நீர் கலந்தும், சாக்கடை கலந்தும் வருகிறது. இதில் குளிக்கவே முடியாது. பின்னர் எப்படி குடிக்க முடியும்.
பேரூராட்சி நிர்வாகம் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளை வைத்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தது. தவிர குச்சனுார் பேரூராட்சி முழுக்க திருவிழா அன்று 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் சப்ளை செய்தது. இவ்வளவு வசதிகள் செய்தும், பேரூராட்சி அலுவலகம் அருகே இருந்த அதாவது பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் அமைத்திருந்த குடிநீர் பந்தல் தவிர மற்ற இடங்களில் மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது.
இந்த புகாரை பொதுமக்கள் கோயில் அறநிலையத்துறை அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அடுத்த வாரம் முழுமையாக சரி செய்வதாக அவர்கள் மக்களிடம் உறுதி அளித்தனர். இது குறித்து பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது, ‘திருவிழாக்காலங்களில் நகர்பகுதி முழுக்க தடையற்ற குடிநீர் சப்ளை வழங்கப்பட்டது. மெயின் ரோட்டில் மூன்று இடங்களில் குடிநீர் தொட்டி வைத்து, தொடர்ந்து சப்ளை செய்தோம். கோயில் வளாகத்தில் வைத்திருந்த தொட்டி மட்டும் செயல்படவில்லை என்ற புகார் எங்களுக்கும் வந்தது. இது அறநிலையத்துறை அதிகாரிகள் செய்த குளறுபடியால் வந்த சிக்கல். இதனை கவனத்தில் கொடுத்து இன்னும் இரண்டு வார திருவிழா நடக்கும் காலங்களில் நிச்சயம் மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் சப்ளை செய்வோம். இவ்வாறு கூறினார்.