கார்களில் சென்று மதுபாட்டில் விற்பனை..! அனுமதியற்ற விற்பனையில் புதுநுட்பம்..!
தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்பவர்கள் போலீசாரிடம் இருந்து தப்ப நுாதன வழியை கையாளுகின்றனர்.
காரில் வந்து விற்பனையினை வேகமாக முடித்து விட்டு, அடுத்த இடத்திற்கு சென்று விடுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் முறையற்ற மதுபாட்டில் விற்பனையை தடுக்க போலீஸ் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சில நாட்கள் முன்பு வரை ஓரிடத்தில் பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். இதனால் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பதுக்கி வைக்கப்பட்ட பாட்டில்களை அள்ளிச் சென்று விடுகின்றனர். இதனால் முறையற்ற மதுபாட்டில் விற்பனையாளர்கள் புது யுக்தியை கையாளுகின்றனர். அதாவது கிராமத்திற்கு அருகே ஒரு குறிப்பிட்ட இடத்தில் குடிமகன்களை வரச்சொல்கின்றனர். அந்த பகுதியில் ஒருவர் டூ வீலரில் சென்று போலீஸ் நடமாட்டம் உள்ளதா என நோட்டம் இட்டு, பின்னால் காரில் வருபவர்களுக்கு தகவல் தருகிறார்.
அவரிடம் இருந்து சிக்னல் கிடைத்ததும், காரை அந்த பகுதியில் நிறுத்தி, 10 நிமிடத்தில் பலநுாறு பாட்டில்களை விற்று விட்டு, அடுத்து இடத்திற்கு சென்று விடுகின்றனர். பாட்டில்களை வாங்கும் குடிமகன்கள் ரோட்டோரங்களில் அல்லது விவசாய நிலங்களில் அமர்ந்தும், தனியாக உள்ள கடைகளில் அமர்ந்தும் மது அருந்துகின்றனர்.
அடுத்து சிறிது நேரம் கழித்து பாட்டில் தேவைப்பட்டால் அவர்களது விற்பனை பிரதிநிதியிடம் தகவல் கொடுத்தால் போதும், அவர்கள் பாட்டில்களுடன் காரில் வந்து விநியோகத்தை முடித்து விட்டு பறந்து விடுகின்றனர். இதனால் அதிகாலை முதலே பாட்டில் தடையின்றி கிடைத்து வருகிறது.
இதனால் குடிமகன்களின் குடும்பம் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவதோடு, பொதுமக்கள் குடிமகன்களின் தொல்லையால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.