கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மதுபாட்டில் வாங்க முடியும்: ஆட்சியர் அதிரடி

தேனி மாவட்டத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி சான்றை காட்டினால் மட்டுமே டாஸ்மாக் கடைகள் மதுபாட்டில் வழங்க வேண்டும்

Update: 2021-10-05 04:15 GMT

பைல் படம்

தேனி மாவட்டத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வழங்க முடியும் என தேனி கலெக்டர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:  தேனி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசி போட தகுதி வாய்ந்த 10 லட்சத்து 44 ஆயிரத்து 598 பேர் உள்ளனர். இவர்களில் 5 லட்சத்து 90 ஆயிரத்து 330 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 2 லட்சத்து 20 ஆயிரத்து 828 பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. சராசரியாக மாவட்டத்தில் 57 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் 100 சதவீத தடுப்பூசி இலக்கினை எட்ட திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன.

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்கி குடிப்பவர்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட தயக்கம் காட்டுவதால் 100 சதவீத இலக்கினை எட்டுவது சவாலாக உள்ளது. எனவே இன்று முதல் (அக்- 5 தேதி) டாஸ்மாக் கடைகளில் தடுப்பூசி போட்டதற்கான சான்று அல்லது மொபைலில் வந்த குறுஞ்செய்தியை காட்டினால் மட்டுமே மதுபாட்டில்கள் வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே இனிமேல் மதுபாட்டில்கள் கிடைக்கும். 

Tags:    

Similar News