கேரளாவின் இடுக்கி மாவட்டம் முழுவதும் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுமா?

Today Theni News -கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் சில பகுதிகள் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2022-10-03 02:59 GMT

இடுக்கி மாவட்டத்தின் மலைப்பகுதி பைல் படம்.

Today Theni News -முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு காண தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இடுக்கி மாவட்டத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

ஓராண்டுக்கு முன்பு தேவிகுளம் பீர்மேடு, உடுமஞ்சோலை தாலுகாக்களை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கமும் கோரிக்கை விடுத்தது. இது எந்த அளவு சாத்தியம் என்பது தெரியவில்லை.

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து தனி மாநில கோரிக்கையோடு நீண்ட காலங்களாக போராடிக் கொண்டிருந்த டார்ஜிலிங் மலைப்பகுதி கூர்க்காக்கள், ஒரு கட்டத்தில் ஜனநாயக பாதையை விட்டு விலகி ஆயுதப் பாதைக்கு மாறினார்கள். மிகப்பெரிய வன்முறை சம்பவங்கள் எல்லாம் அரங்கேறி, சகோதர யுத்தங்களும் பல நூறு பேரை பலி வாங்கியது. ஆனால் தன்னலமற்ற மக்கள் தலைவர்கள் சிலர் டார்ஜிலிங்கை அமைதிப் பாதைக்கு திரும்பினார்கள்.

டார்ஜிலிங் முழுக்க முழுக்க மலைப்பகுதி என்பதோடு அங்கும் தேயிலை தான் விவசாயம். கிட்டத்தட்ட தேவிகுளம், பீர்மேட்டின் நிலவியல் அங்கேயும் அம்சமாக பொருந்திப்போகும். அந்த அடிப்படையில் தான் இடுக்கி மாவட்டத்தோடு வல்லடியாக சேர்க்கப்பட்ட தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை தாலுகாக்களை, யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. டார்ஜிலிங் மலைப்பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போராட்டக்காரர்கள், அதோடு நில்லாமல் கேம்ப்லிங் என்கிற சமவெளிப் பகுதியையும் யூனியன் பிரதேச அந்தஸ்துக்கு மாற்றும்படி  கோரினார்கள்.

ஆனால் சமவெளிக்காரர்களுக்கு அதில் உடன்பாடு இல்லாமல் போனது. வேறு வழியின்றி இப்போதும் கூர்க்காலேண்ட் தன்னாட்சி கவுன்சிலில் நீடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது போன்றதொரு நிலைமை இங்கும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களிலும் ஒட்டுமொத்தமாக இன்றைக்கு தமிழர்கள் தான் பெரும்பான்மை. ஆனால் ஒட்டுமொத்த இடுக்கி மாவட்டத்தில் வரும் தொடுபுழா மற்றும் இடுக்கி தாலுகாக்கள் மலையாள மெஜாரிட்டியை அடிப்படையாகக் கொண்டது.

அவர்கள் யூனியன் பிரதேச அந்தஸ்தை ஏற்றுக்கொள்வார்களா என்கிற பெருஞ்சிக்கல் அங்கே எழும். தமிழர்களோடு அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள அவர்கள் எத்தனை தூரம் தயாராவார்கள் என்கிற அடுத்த கேள்வியும் இருக்கிறது.

கூர்க்கா லேண்டோடு ஒட்டியும் ஒட்டாமல் இருக்கும் கேம்ப்லிங் வட்டார நிலைப்பாட்டை போன்றதொரு நிலைக்கு அவர்கள் செல்லலாம். எனவே தான் நாம் தொடுபுழா மற்றும் இடுக்கி ஆகிய இரண்டு தாலுகாக்களுக்கும் உரிமை கோராமல், பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களுக்கு மட்டும் உரிமை கோர வேண்டும். இந்த உரிமை போராட்டத்தை வலுவாக முன்னெடுத்தால், நிச்சயம் வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது என பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் முதன்மை நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News