இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் களைகட்டிய இட்லி மாவு விற்பனை -பெண்கள் நிம்மதி
இந்த சிறு தொழில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது, குடும்ப செலவினங்களை ஈடுகட்ட பெருமளவு உதவி செய்கிறது -பெண்கள் நிம்மதி.
தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அச்சத்தால் முடங்கி கிடந்த இட்லி, தோசை மாவு விற்பனை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் களைகட்டி வருகிறது.
தேனி மாவட்டத்தில் பெரும்பாலான குடும்ப பெண்கள் இட்லி மாவு, தோசை மாவு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் இட்லி மாவு, தோசை மாவு விற்பனை களை கட்டி வந்தது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பிரச்னை அதிகரிக்க தொடங்கியதும், இட்லி மாவு, தோசை மாவு வெளியில் வாங்குவதை மக்கள் குறைக்க தொடங்கினர்.
மெல்ல மெல்ல முடங்கிய இத்தொழில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாமலேயே போனது. தற்போது கொரோனா தொற்று அச்சம் குறைந்துள்ளது. தேனி மாவட்ட மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தினமும் பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை பகிரங்கமாகவே வெளியிட்டு வருகிறது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் மாதம் நடுநிலைப்பள்ளிகளும் (6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) திறக்கப்படும் நிலை காணப்படுகிறது.
தவிர ஒட்டுமொத்த தேனி மாவட்டமும் கொரோனா அச்சத்தில் இருந்து விடுபட்டுள்ளது. இதனால் மீண்டும் பல்வேறு தொழில்கள் உருவாகி வருகின்றனர். இரண்டு ஆண்டகளாக முடங்கி கிடந்த இட்லி மாவு, தோசை மாவு அரைத்து விற்பனை செய்யும் தொழிலும் களைகட்டி வருகிறது. ஒரு தெருவிற்கு குறைந்தது நான்கு முதல் ஐந்து பெண்கள் ஒரு அண்டாவில் மாவு அரைத்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஐந்து ரூபாய் முதல் தேவைக்கு ஏற்ப எவ்வளவுக்கு வேண்டுமானாலும் இட்லி மாவு, தோசை மாவு வாங்கிக் கொள்ளலாம். தற்போது இந்த சிறு தொழில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது குடும்ப செலவினங்களை ஈடுகட்ட பெருமளவு உதவி செய்வதாக குடும்பத்தலைவிகள் தெரிவித்தனர்.