தேனி நகராட்சி துணைத்தலைவர் யார்?: திமுகவில் அதிகரித்துள்ள குழப்பம்
தேனி நகராட்சி தலைவர் பதவி காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், துணைத்தலைவர் பதவிக்கு திமுகவில் பெரும் போட்டி எழுந்துள்ளது.
தேனி நகராட்சி தலைவர் பதவியை எதிர்பார்த்திருந்த தி.மு.க., நகர செயலாளர ்பாலமுருகன், அவரது மனைவி ரேணுப்பிரியா பாலமுருகன் ஆகியோர் காங்., கட்சிக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதால் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் இவர்களை சமாதனப்படுத்த துணைத்தலைவர் பதவியை தரலாம் என சிலர் யோசனை முன்வைத்தனர்.
அதற்கு நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் இரு பதவிகளையும் ஒரே சமூகத்திற்கு கொடுத்தால் மெஜாரிட்டி பொறுப்பில் உள்ள வேறு சமுதாய பிரதிநிதிகளுக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும் என சிலர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தங்க.தமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் உட்பட பலர் தேனி கவுன்சிலர்களை அழைத்து பேச்சு நடத்தி வருகின்றனர். தேனியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடந்த ஏழு மணி நேரமாக நடந்த பேச்சுவார்த்தை தற்போது வரை இழுபறி என்ற நிலையிலேயே உள்ளது.
ஒரு சமூகத்திற்கு இரண்டு பதவிகள் வேண்டாம். மற்றொரு சமூகத்தில் எட்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவரை தி.மு.க.,வின் முக்கிய தலைவர் ஒருவரே முன்மொழிந்துள்ளார். அவருக்கு துணைத்தலைவர் சீட் வழங்குங்கள் என ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தேனியில் இரண்டாவது பெரிய சமூகத்தை சேர்ந்த ஒருவர் நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவரது சமூகத்திலும் அதிக கவுன்சிலர்கள் உள்ளனர். அவருக்கு தான் துணைத்தலைவர் சீட் தர வேண்டும் என ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளை தீர்க்க தொடர்ச்சியாக ஏழு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை.
குறிப்பாக துணைத்தலைவர் பதவிக்கு நகர செயலாளர் பாலமுருகன், வழக்கறிஞர் செல்வம், நாராயணபாண்டி ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண தொடர்ந்து பேசலாம் என மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் அறிவுறுத்தி உள்ளார்.