தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பினால் மீட்பது எப்படி?

தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பினால் மீட்பது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.;

Update: 2024-02-10 00:55 GMT

பைல் படம்

ஆன்லைன் மூலம் பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பும் போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஒரே ஒரு எண் மாறினால்கூட சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டிய பணம் எங்கோ இருக்கும் தவறான நபருக்குப் போய்ச் சேர்ந்து விடும். இப்படி தவறான நபருக்கு நாம் பணத்தை அனுப்பி விட்டால், அந்தப் பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது..? அந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விகள் முக்கியமானவை.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பணப்பரிமாற்றம் செய்யும் போது சரியான பயனாளியின் கணக்கு எண் மற்றும் விவரங்களைக் கொடுப்பதற்கான முழுப்பொறுப்பும் பணம் செலுத்துபவரையே சாரும்.

பணப்பரிமாற்றத்தில் தவறான அக்கவுன்டுக்குப் பணம் சென்றடைவது போன்ற தவறுகளுக்குப் பணம் செலுத்துபவரே பொறுப்பாளியாக வேண்டும். குறிப்பிட்ட வங்கியோ அல்லது பணம் தவறுதலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள கணக்குக்கு உரியவரோ எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் தவறான கணக்குக்குப் பணம் செலுத்தப்பட்டால், அந்த எண்ணில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லையெனில் தானாகவே பணம், செலுத்தியவரின் வங்கிக் கணக்குக்கே திரும்ப வந்து விடும். எனவே, இத்தகைய தவறுகளால் எந்தச் சிக்கலும் ஏற்படாது. ஒருவேளை அந்த எண்ணில் வேறு யாருக்கேனும் வங்கிக் கணக்கு இருக்கும் பட்சத்தில், அந்தப் பணத்தை அந்த அக்கவுன்ட் உனக்கு உரியவரின் அனுமதியின்றி திரும்ப எடுக்க இயலாது.

இப்படித் தவறுதலாக இன்னொருவரின் அக்கவுன்டிற்குப் பணத்தைச் செலுத்தியது தெரிய வந்தால், பணம் செலுத்தியவர், உடனடியாக வங்கியை அணுகிப் பணத்தைத் தவறுதலாகச் செலுத்தியதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால், செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் வங்கிக் கிளை ஈடுபடும்.

அதன்படி, எந்த வங்கி அக்கவுன்டிற்குத் தவறுதலாகப் பணம் செலுத்தப்பட்டதோ, அந்த வங்கிக்கு, நடந்த தவறுகள் குறித்த விவரங்களை அளித்துப் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பணப் பரிமாற்றச் சிக்கலில் வங்கியானது, பணத்தை இழந்தவருக்கு, பணத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு நிர்வாக ரீதியான பக்கபலமாக மட்டுமே செயல்படும். எந்த வங்கிக்குப் பணம் மாற்றப்பட்டுள்ளது, அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் தொடர்பு எண் போன்ற விவரங்களைப் பெற்றுத் தருவதற்கு முயற்சி எடுக்கும். பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டால், அதற்கான விண்ணப்பத்தை முறையாக அளித்துப் பெற்றுத் தரவும் வங்கி உதவும்.

அதேபோல, பணம் தவறுதலாக மாற்றப்பட்ட அக்கவுன்ட்டில், அந்த நபர் பணத்தை எடுக்க இயலாதபடி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தவும் இயலும். அதன்பின் பணப்பரிமாற்றத்தவறு குறித்து எடுத்துச்சொல்லி, உரியவருக்குப் பணத்தைத் திருப்பியளிக்க ஒப்புக்கொண்ட பின் தடை நீக்கப்படலாம்.

சிலநேரம் தனது அக்கவுன்டில் கூடுதலாகப் பணம் இருப்பதைக்கூடக் கவனிக்காமல் அவசரத் தேவைக்காக அந்தப் பணத்தைச் செலவழிக்கவும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். அப்படி நடக்கும்பட்சத்தில் திரும்பவும் அந்தத் தொகையை, அந்த அக்கவுன்டில் நிரப்பும் வரை சற்றுப் பொறுத்திருக்கத் தான் வேண்டும். உடனே பணத்தைத் திரும்பத் தரவேண்டுமென அவரைக் கட்டாயப்படுத்த இயலாது. அவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து, காலதாமதம் ஆகலாம். உதாரணமாக, ஒருவரின் அக்கவுன்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை தவறுதலாக வந்து சேர்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அந்த அக்கவுன்டுக்கு உரியவருக்குப் பண நெருக்கடி இருந்து, அந்தத் தொகையை எடுத்துச் செலவழித்திருப்பாராயின், மீண்டும் அந்த ஒரு லட்சம் ரூபாயை அவர் திரும்பச் செலுத்தும் வரை காத்திருக்க வேண்டும். இன்னும் இரண்டு நாளில் பணத்தைப் போட வேண்டுமென்று கெடு விதிக்க முடியாது.

அதேபோல, அந்தப் பணத்தைத் திரும்ப அளிக்க மறுப்புத் தெரிவித்தால், அவர்மீது வங்கி, நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. ஏனெனில் முதல் தவறு, பணப் பரிமாற்றம் செய்தவருடையது. எனவே, கடுமை காட்டாமல் பக்குவமாக அந்தப் பணத்தைத் திரும்பப் பெற முயற்சி எடுக்க வேண்டும்.

இதில், பணத்தைப் பெற்றவர், அந்தப் பணத்தைத் தரவே முடியாதென முரண்டு பிடித்தால் மட்டும், சட்டப்படியான மேல் நடவடிக்கையில் இறங்கிப் பணத்தை மீட்டெடுக்க வேண்டும்.

இதேபோல, உங்களுடைய வங்கிக் கணக்குக்கு வேறு யாருடைய வங்கிக் கணக்கிலிருந்தோ பணம் மாறி வந்திருப்பதாகத் தெரிந்தால், உடனே அதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தையோ அல்லது வங்கிக் கிளையையோ அணுகி, விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.

அப்படித் தவறுதலாகப் பணம் வந்திருப்பது உறுதியானால், உரியவருக்குத் திருப்பிச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வங்கியிடம் தெரிவிக்க வேண்டும். நேர்மையான அணுகுமுறை இரு தரப்பிலும் இருக்குமென்றால், இத்தகைய பணப் பரிமாற்றத் தவறுகளைத் தீர்ப்பது எளிது. பணம் தவறுதலாக இன்னொரு அக்கவுன்டுக்குச் செல்லாமல் பணப் பரிமாற்றம் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

முதலில் ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்யும்முன்பு, எந்த வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்கிறோமோ, அதன் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து சேமித்து வைக்க வேண்டும். இப்படிச் சேமித்து விடுவதால், தவறான எண்ணுக்கு அனுப்பும் சூழ்நிலை ஏற்படாது. அதேபோல, இணைய மையங்களிலிருக்கும் கணினிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கணினிகளில் வைரஸ் பாதிப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியிருந்தால்தான் ஹேக்கர்கள் சிக்கல் இருக்காது. ஆன்லைன் பணப் பரிமாற்றம் என்பது இன்றைக்கு எல்லோரும் பின்பற்றும் வழிமுறையாக மாறி விட்டது. பணத்தை மிக வேகமாகவும், குறைந்த செலவிலும் அனுப்ப இதுதான் மிகச் சிறந்த வழி. எனவே, கொஞ்சம் ஜாக்கிரதையாக இதைச் செய்தால், பாதுகாப்பாகப் பணத்தை அனுப்பி, நம்மால் நிம்மதியாக இருக்க முடியும்.

Tags:    

Similar News