''பால் காய்ச்சப்போறோம்'' வைரலாகும் அழைப்பிதழ்
சிறைத்துறை போலீஸ் அதிகாரி அச்சிட்டு வழங்கிய புதுமனைப் புகுவிழா அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
அரக்கோணம் சுவால்பேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த சிறைத்துறை போலீஸ் அதிகாரி பெ.சீ.காமராஜன். அவரது மனைவி இந்துமதி (சென்னை யுனிவர்சிட்டி உதவியாளர்) இருவரும் புது வீடு கட்டி உள்ளனர். இந்த வீட்டிற்கு வரும் டிசம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியில் இருந்து 10.00 மணிக்குள் ''பால் காய்ச்சி'' குடியேறப்போகிறார். இதற்காக இவர் அச்சிட்டுள்ள பத்திரிக்கை தான் அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அப்படி என்ன தான் அச்சிட்டுள்ளார் எனக்கேட்கிறீர்களா? 'பால் காய்ச்சப் போறோம்' என்ற தலைப்பில், அன்புள்ள (உ)ங்களுக்கு, கல்யாணத்தை பண்ணிப்பாருங்க... வீட்டை கட்டிப்பாருங்கன்னு சொல்லுவாங்க... கால்யாணம் பண்ணிட்டோம்... இப்ப வீட்டையும் கட்டிட்டோம்.
ரொம்ப ஆசைப்பட்டு அரக்கோணம், சுவால்பேட்டை, மேட்டுத்தெரு, மனை எண் 13ல் எங்களால் கட்டப்பட்ட அன்புக்குடில் ''புதுமனை புகுவிழா'' 04-12-2022-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கப்போகுது... எல்லாரும் வந்துடுங்க... விடியற்காலை வர முடியாது என்பதற்காக விடிஞ்சதுக்கு அப்புறமாதா வச்சிருக்கோம். வந்து எங்க சந்தோசத்தை பகிரந்துக்க ஆசையுடன் அழைக்கிறோம். உங்களை வரவேற்க வாசலில் நானும், என் மனைவியும், எங்கள் பிள்ளைகளுடன் காத்திருக்கிறோம்... வருவீங்கல்ல.. என்று அச்சிட்டு அன்புடன் எனக்கூறி தங்களது பெயரை அச்சிட்டுள்ளார்.
இதெல்லாம் ஒரு வித்தியாசமா? என அவசரப்பட்டு கோபப்படாதீங்க... இனிமேல் தான் விஷயமே இருக்கு... இரண்டாம் பக்கத்தில் வழக்கமாக உறவினர்கள், நண்பர்கள் பெயரை தான் அச்சிடுவோம். ஆனால் இவர் .... என் வீட்டிற்காக வியர்வை சிந்தி உதவிய அன்புள்ளங்கள்.... என அச்சிட்டு...
தலைமை மேஸ்திரி: ஜெயராமன் மேஸ்திரி ஜெ.பி., பில்டர்ஸ், அரக்கோணம், மேஸ்திரிகள்: முனுசாமி, பாபு, தட்சிணாமூர்த்தி, வேலு, தயாளன், கோபி, மாரி, சேட்டு, ராஜீவ்காந்தி, கொத்தனார்கள்: ராமு, நீலா, சாந்தி, காந்தா, அலமேலு, பில்டர், வஜ்ஜிரவேல், கட்டுமான பொருட்கள் உதவி: விநாயகா டிரேடர்ஸ், அரக்கோணம், மணல், கம்பி, சிமென்ட், கற்கள்: ரமேஷ், பாஸ்கர், சந்திரசேகர்நாயுடு, பாலாஜிநாயுடு, கம்பி கட்டுனர் : சரவணன், அப்பு, அசோக், நாராயணன், தச்சன்: ரமேஷ், மின் வல்லுநர்: தினகரன், செந்தில், பாஸ்கர், திருமலை, வர்ண கலைஞர்: முரளி குழுவினர், தரை அழகு: ராஷித்கான், வெல்டிங் ஒர்க்ஸ்: அருள், மின்னல், UPVC ஒர்க்ஸ்: ஸ்டார் எண்டர்பிரைசஸ், ஏகேஎம், நிதி உதவி: பாரத ஸ்டேட் வங்கி, அரக்கோணம் கிளை மற்றும் பலதரப்பட்ட நகைகள் என அச்சிட்டுள்ளார்.
தனது வீடு கட்ட உதவியவர்களையும், கடன் கொடுத்து உதவிய வங்கியையும், தனது நகைகளுக்கும் கூட இவர் நன்றி தெரிவித்து பத்திரிக்கையில் அச்சிட்டது பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. அத்தனை பேரும் இவரது புத்திசாலித்தனத்தையும், நகைச்சுவை உணர்வையும், மனிதநேயத்தையும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.