பள்ளிகளுக்கு விடுமுறையா? முடக்கமா? சாமர்த்தியமாக செயல்பட்ட தமிழக அரசு
பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளித்த விஷயத்தில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடைமுறைகளை அமல்படுத்தத்தொடங்கிவிட்டது;
கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை அளித்துள்ளது. ஆசிரியர் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்றது போல் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளது.
தமிழக அரசு இந்த கல்வி ஆண்டிற்கு இனிமேல் அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு விடுமுறை கூட கிடையாது. வாரந்தோறும் சனிக்கிழமையும் கூட பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று கண்டிப்பு காட்டி வந்தது. இது பற்றி முறையான அறிவிப்புகளையும் கூட கல்வித்துறை வெளியிட்டது.
இந்நிலையில், கொரோனாவின் மூன்றாவது அலை ஒமிக்ரான் வைரசால் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் 38 என சிறிய கணக்கு சொல்லப்பட்டாலும், பரவல் தொடங்கி விட்டது என்று சுகாதாரத்துறை அபாயமணி அடித்துவிட்டது. கண்டிப்பாக வரும் டிசம்பர் 25ம் தேதி முதல் பாலர் பள்ளிகளையும், தொடக்கப்பள்ளிகளையுமாவது மூடுங்கள் என சுகாதாரத்துறையினர் கூறி வந்தனர். தலைநகர் தில்லி உட்பட பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
மத்திய அரசும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தி வந்தது. இது பற்றி தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில் ஆசிரியர் சங்கங்கள் வலுக்கட்டாயமாக அரசிடம் சென்று எங்களுக்கு அரையாண்டு விடுமுறை வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நல்ல காரணம் கிடைத்து விட்டது என நினைத்த தமிழக அரசு, ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று வரும் டிசம்பர் 25ம் தேதி சனிக்கிழமை முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என அறிவித்து விட்டது. இதனால் ஆசிரியர் சங்கங்கள் மனம் குளிர்ந்து போய் உள்ளனர். ஆனால் உண்மையில் பள்ளிகளை மூடி விட்டாலே பாதி மக்கள் நடமாட்டம் குறைந்து விடும்.
டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2 ம் தேதி வரை கல்லுாரிகளுக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படுகிறது. பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு விட்டாலே தமிழக அரசுக்கு பாதி தலைவலி சரியாகி விடும். மீதம் இரவு நேர ஊரடங்கு என சில கட்டுப்பாடுகளை மட்டும் விதித்து, ஒமைக்ரானின் தீவிரத்தை ஜனவரி 2ம் தேதி வரை கண்காணித்து அதற்கடுத்து என்ன செய்யலாம் என ஒரு வாரம் கழித்து தீர்மானிக்கலாம் என தமிழக அரசு முடிவெடுத்து விட்டது.
எப்படியோ கொரோனாவை தடுக்க விடுமுறையும் விட்டாச்சு. ஆசிரியர் சங்கங்களை திருப்திப்படுத்தியது போலாகிவிட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.