மோடி என்ற வரலாற்று தலைவனை தந்த தாய் ஹிராபென்
100 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்தவரும் ஆயிரம் பிறைகளை கண்டவரும் நரேந்திர மோடி எனும் தலைவரின் தாய் ஹிராபென் காலமானார்;
தன் மகனை இருமுறை பிரதமராக பார்த்த பின் அவர் ஆட்சியில் நாடு மாபெரும் வளர்ச்சி அடைவதை கண்ட பின், குஜராத்தில் மகன் பெயரால் கட்சி நிலைத்து சாதனை அடைந்திருப்பதை கண்ட பின் அவரின் காலம் ஈடேறி விட்டது.
நாட்டுக்கு மாபெரும் நன்மக்களை கொடுத்தவர் வரிசையில் அந்த கவுசல்யை தொடங்கி காமராஜர் , சாவர்க்கர், நேதாஜி என எல்லோரின் தாயின் வரிசையில் அந்த தெய்வத்தாயும் இடம் பிடித்து விட்டார்.ஒரு தலைவரை உருவாக்குவதில் அவனின் அன்னையே பிரதான பாத்திரம். தாய் தான் ஒருவரை சரியான பாதையில் நடத்தை மற்றும் மனத்தால் நல்ல விஷயங்களை பதிய வைக்க முடியும். அவ்வகையில் ஹிராபென் சரியாக இருந்திருக்கின்றார்.
சராசரி தாயினை போல சம்பாதிக்க சொல்லி அடித்து விரட்டியிருந்தாலும், பொருள் ஒன்றே பிரதானம் என அவரை சம்பாதிக்க தூண்டியிருந்தாலும் மோடி இன்று நமக்கு கிடைத்திருக்க மாட்டார்.நான் பேரன் பேத்திகளை காண வேண்டும், என் மகன் சம்பாதித்து வீடும் குடும்பமுமாக இருக்க வேண்டும் அது தான் என் ஆசை என அவர் மோடியினை கட்டிபோட்டிருந்தாலும் இன்று நமக்கு மோடி இல்லை. அந்த மாமனிதன் மூலம் இன்று நம் தேசத்தின் வளர்ச்சி இப்படி வேகமாக இருந்திருக்காது.
அந்த தாய் தன் மகனை அவர் விருப்பப்படி இந்நாட்டுக்கு கொடுத்திருக்கின்றார், தன் மகனின் ஆசையும் விருப்பமும் இந்நாடு என்றால் அங்கேயே செல்லட்டும் என மகிழ்சியாய் அனுப்பி வைத்திருக்கின்றார். தன் ஆசாபாசம் கனவு, தன்னை அருகிருந்து அவன் பார்த்துகொள்ளும் கடமை என எல்லாமும் அறுத்து மனதை அடக்கி ஆளும் பெரும் தலைவரை நாட்டுக்கு தந்திருக்கின்றார்.
மகன் சன்னியாசி கோலத்தில் செல்லும் பொழுது அவரது தாய் பட்டினத்தார் தாயின் நிலைபோல் மனம் அடக்கி சிவனே என ஓப்படைத்திருக்கின்றார். தாயின் ஆசி இல்லாமல் எந்த மகனும் உயரம் தொடமுடியாது. வாழ முடியாது.அவ்வகையில் இந்த மாதரசியின் மாபெரும் ஆசியிலே மோடி எனும் மாமனிதன் இந்த அளவு உயர்ந்து நாட்டையும் உயர்த்தியிருக் கின்றார். தன்னை வருத்தி தன் மகனோடு உறவறுத்து அவரை நாட்டுக்கு சன்னியாசி கோலத்திற்கு தந்த அந்த தாய் இந்திய தாய்மார்களில் சிறந்தவர்.
ஒவ்வொரு தாயும் எப்படி இருக்க வேண்டும் என்பதன் உதாரணம். ராவணனுக்கும் தாய் இருந்தார். துரியனுக்கும் தாய் இருந்தார் என்றாலும் உலகம் போற்றுவது ராமன் மற்றும் கண்ணனின் தாயினை அன்றி வேறு யாரையும் அல்ல.
கவுசலைக்கும் சும்திரைகும் தன் மகன் 14 ஆண்டுகளில் வருவார் என நம்பிக்கை இருந்தது, ஒரு ஆறுதல் இருந்தது. குந்திக்கு தன் ஐந்து மகன்களும் தன்னோடு இருக்கவேண்டும் என்ற ஏக்கத்தை தாண்டி கர்ணனும் தன்னுடன் வாழவேண்டும் எனும் தவிப்பும் இருந்தது.தாய்பாசம் அப்படியானது
அப்படியான தாய்கள் உள்ள நாட்டில் பட்டினத்தார் தாய்தான் தன் மகனை காசிக்கு அனுப்பும்பொழுது தன் கையால் காசாயம் எனும் கோவணமும் கொடுத்து, அரிசியினை முடிந்த முடிச்சும் கொடுத்து இந்த முடிச்சு அவிழ்ந்தால் என் காரியத்துக்கு வா என அனுப்பியும் வைத்தவர்.இந்த ஹிராபென் அந்த மாதிரி மிகப்பெரிய புண்ணியம் செய்தவர். மகனை புரிந்து நாட்டுக்கு தந்த தாயும், தாயின் மனம் புரிந்து கடைசி வரை அவருக்கு நற்பெயர் ஒன்றே பெற்றுதந்துகொண்டிருக்கும் அந்த மகனும் உத்தமமானவர்கள்.
அதிகார வெறியும் சுயநலமும் கொண்ட ஒரு தலைவனால் நாட்டையும் நாட்டு மக்களையுன் உள்ளன்போடு நேசிக்க முடியாது. யாருக்கு நல்ல மனமும் உள்ளமெல்லாம் அன்பும் தியாக உணர்வும் உண்டோ அவரே நல்ல தலைவன் ஆக முடியும்.அப்படி மோடியின் மனது உலகறிந்தது, தேசத்தையே இப்படி நேசிக்கும் மகன் தாயினை எப்படி நேசித்திருப்பார்?தேசத்துக்காக மகனையே தந்தை தாய் அந்த தேசத்தை எப்படி நேசித்திருப்பார்? விவேகானந்தரின் தாயின் பெருமைக்கு சற்றும் குறையாதது அந்த அன்னை ஹிராபாயின் தியாக வாழ்வு.
ஒவ்வொரு இந்திய தாயும் எப்படி குழந்தைகளை வளர்க்க வேண்டும், நாட்டுபற்றோடு வளர்க்க வேண்டும் என்பதற்கு இவரே உதாரணம். அவர் தன் குழந்தைக்கு பன்னாட்டு கல்வி கொடுக்கவில்லை, அரைமணி நேரம் கூட தூங்கவிடாத டியூசன் கொடுக்கவில்லை. 24 மணிநேரமும் படிப்பு, வேலை, அடுத்தவீட்டு அந்தஸ்து, அக்கம் பக்கத்து சொத்து, சொந்தகாரர் பணவலிமை பற்றி பேசவில்லை.
நீ அப்படி ஆக வேண்டும் இப்படி ஆகவேண்டும் என ஆசைகாட்டவில்லை. மாறாக இந்நாட்டை பற்றி சொல்லிகொடுத்தார், இந்த மதத்தை கற்று கொடுத்தார். இதிகாசங்களையும் வேதங்களையும் இந்நாட்டின் தார்பரியத்தையும் கற்றுகொடுத்தார்.மகன் அரசு அலுவலக குமாஸ்தா என்றாலே தாய்மார்கள் தங்கத்தில் ஜொலிக்கும் நாடு இது. அதுவும் மகன் பதவி பெற்று விட்டாலே விதவிதமான கார்களில் பெரும் அரண்மனையில் சொந்தங்கள் மத்தியில் ராஜாங்கம் செலுத்தும் பெண்கள் உள்ள நாடு இது.
இங்குதான் மகன் மாகாண முதல்வர், நாட்டின் பிரதமர் அதுவும் உலகமே கொண்டாடும் பிரதமர் என்றாலும் அவர் கடைசி வரை தவகோலத்தில் இருந்தார்.அந்த எளிய வீடும், மிக சாமான்ய ஆடையும், முழுக்க தரித்த விபூதியுமாய் அவர் கர்ம தவம் இருந்தார். தான் பெற்ற வீடும் வெற்றிலை கூட மகனுக்கு அவப்பெயரை உண்டாக்கும் என தனித்து தவமிருந்தார் அந்த தாய்.
என்றாவது உல்லாச காரில், பெரும் பட்டாடையும் நகையும் அணிந்து அவர் பவனிவர கண்டதுண்டா. சொந்த பந்தம் நடுவில் அவள் ராணியாக வலம் வர கண்டதுண்டா? ஒரு பிடி அரிசி மகன் பெயரால் அவர் பெற்றார் என பார்த்ததுண்டா?மகனுக்காய் அப்படி ஒரு தவவாழ்வு வாழ்ந்தாள் அந்த தாய். நாடெல்லாம் கொடிகட்டி உலகெல்லாம் ராஜாவாய் வலம் வந்தாலும் மகன் தாய்க்கொரு சேலை வாங்கி கொடுத்தார் எனும் செய்தி உண்டா?
அரைமைல் சென்றாலே தாய்க்கு அள்ளிவருவோர் உள்ள உலகில் அகிலத்தை ஆட்டிவைக்கும் அந்த மகன் தன் தாய்க்கு தம்படி பொருள் கொடுத்தார் என செய்தி உண்டா?நீங்களோ நானோ அறிந்திருக்க முடியுமா?ஹிராவின் மனமும் மோடியின் மனமும் எப்பொழுது நினைத்தாலும் கண்ணீர் விட வைக்கும் காட்சிகள், சிலிர்க்க வைக்கும் வரலாறுகள். மகனுக்காக தாயும், தாய்க்காக மகனும் தன் பாசத்தையெல்லாம் அடக்கி நாட்டுக்காக வாழ்ந்த பெரும் பிம்பங்கள். அந்த ஹிராபென் இப்போது காலமாகி விட்டார்.
தேசத்தின் மாபெரும் தியாக சுடர், இந்த நூற்றாண்டின் தெய்வீக சுடர் அணைந்து விட்டது. மோடி எனும் மகா வெளிச்சத்தை தந்த அந்த ஹிரா அம்மையார் இனி இல்லை என்றாலும் அவரின் தியாகவும் அவர் வாழ்வும் எக்காலமும் நிலைத்திருக்கும்.நாட்டுக்கு நன்மகனை தந்து இந்திய வரலாற்றை மாற்றியதில் ஜீஜாபாய் போல, விவேகானந்தரின் அன்னை புவனேஸ்வரி அம்மையார் போல அவர் என்றும் நிலைத்திருப்பார். இந்துஸ்தான பெண்கள் எப்படி நல்ல இந்து மகனை இந்துஸ்தானியை வளர்க்க வேண்டும் என்பதற்கு அந்த தியாக சுடர் எக்காலமும் பெரும் உதாரணமாய் உயர மின்னுவார்.
மோடி அதிகம் படித்தவர் அல்ல, பெரும் குடும்ப பின்னணியும் குலபெருமையும் கொண்டவர் அல்ல.ஆனால் உண்மையும், சத்தியமும், தேசநலனும் மிகுந்தவர், அது கலந்த உழைப்புத்தான் அவரை உலகில் மின்னவைத்திருக்கின்றது.உலக தலைவர்களில் ஒருவராக உயர்ந்துவிட்ட மோடியின் அன்னை என்பவர் இன்று அகில உலகமும் அஞ்சலி செலுத்தும் தாயாகி விட்டார். நன் மகனை பெற்ற அவருக்கு உலகமே திரண்டு அஞ்சலி செலுத்துகின்றது.
நம் கண்முன் முதல்வராக பிரதமராக நிற்கும் மோடியினைத்தான் நமக்கு தெரியும், ஆனால் அவர் கடந்து வந்த கடின பாதைகளெல்லாம் அவருக்கும் அந்த தாய்க்கும் தான் தெரியும்.அவ்வகையில் மோடி தன் வாழ்வின் முக்கிய பலத்தை இழந்த தருணம் இது. தாய்போல் ஒரு பலமும் ஆறுதலும் யாருக்குமில்லை. இனி தேசத்தின் ஒவ்வொரு தாயும் மோடி தன் மூத்த மகன் என தத்தெடுக்கும் நேரமிது. பிரதமர் மோடிக்கு இன்று இந்தியாவில் பல கோடி தாய்கள் உள்ளனர் என்பதை நாம் நிரூபிக்கும் தருணம் இது தான்.