கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி காட்டம்...!
வெயிலின் தாக்கத்தால் தேனி மாவட்டம் கொதிக்குது. ஒரு இடத்தில் கூட தண்ணீர் வழங்கவில்லை என இந்து எழுச்சி முன்னணி புகார் எழுப்பி உள்ளது.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நடைபெற்றது. தேனி நகர துணைத்தலைவர் எஸ்.நாகராஜ்ஜீ தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் கே.கோவிந்தராஜ்ஜீ முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராமராஜ்ஜீ வழி நடத்தினார். இந்து எழுச்சி முன்னணியை சேர்ந்த ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் பரிதவிக்கின்றனர். ஆனாலும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
நகராட்சியோ, பேரூராட்சியோ, கிராம ஊராட்சியோ எங்குமே அரசு அலுவலகங்கள், பஸ் ஸ்டாண்ட்கள், மக்கள் கூடும் இடங்கள் உட்பட பொதுஇடங்கள் எதிலும் பொதுமக்களின் தாகத்தை தணிக்க வேண்டும் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யவில்லை. இது போன்ற இடங்களில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்காது என வாக்கு கொடுத்து விட்டு தற்போது புதிது புதிதாக மதுபானங்களை அறிமுகப்படுத்தி மேலும் மேலும் அப்பாவி மக்களை குடிகாரர்களாக்கி தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றி வருகிறார். மேலும் தற்போது கஞ்சா அபின் போன்ற எண்ணற்ற போதை வஸ்துக்களும் தமிழகத்தில் அதிகமாக புழக்கத்தில் இருந்து வருவது மிகவும் கேவலமான வெட்கக்கேடான நிகழ்வாக உள்ளது. மது இல்லாத தமிழகம் வேண்டும் என நம்பி ஓட்டு போட்ட மக்களின் நம்பிக்கையினை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றவில்லை. முதல்வரை நம்பி ஓட்டளித்த மக்களின் நம்பிக்கை பொய்த்து போக செய்யாமல் விரைவில் மதுபான கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.
வரும் ஜூலை மாதம் இயக்கத்தின் ஆண்டு திட்டங்களில் ஒன்றான ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் நடத்தப்படும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.