பூரண மது விலக்கு வேண்டி இந்து எழுச்சி முன்னணி மனு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும் என இந்து எழுச்சி முன்னணியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2024-06-24 09:30 GMT

பைல் படம்

இந்து எழுச்சி முன்னணி தேனி நகர செயலாளர் தினேஷ் தலைமையில் பொறுப்பாளர்கள் தேனி கலெக்டர் ஷஜீவனாவை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 56 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த நிகழ்வானது தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது நாள் வரை தமிழக அரசு இதனை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகம் உள்ளது. கஞ்சா, சாராயம், மெத்தப்பெட்டமைன் போன்ற பொருட்கள் அதிகம் புழங்குவது போல் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதனால் பள்ளி சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை இப்போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டுள்ளார்கள் என்ற தகவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சூழல் சமூகத்திற்கு ஏற்றதில்லை. போதை கலாச்சாரம் முழுக்க சமூகத்திற்கு எதிரானது.

எனவே தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு தமிழகத்தில் போதை வஸ்துக்கள் விற்பனை மற்றும் போதை கலாச்சாரத்தை அடியோடு அழித்து ஒழிக்க வேண்டும். மேலும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமானவர்கள் அனைவரையும் துறை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்து எழுச்சி முன்னணி தேனி நகர பொதுச்செயலாளர் சிவராமன், நகர அமைப்பாளர் அரண்மனை முத்துராஜ், நகரச் செயலாளர் புயல் எல்.ஆர்.ஐயப்பன், நகரத் துணைச் செயலாளர்கள் சீனிவாசன், கனகுபாண்டி, நகர செயற்குழு உறுப்பினர் கண்ணன் உட்பட இந்து எழுச்சி முன்னணியினர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News