விளையாட்டு மைதானம் அமைக்க இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்
தப்புக்குண்டு கிராமத்தில் குப்பை கிடங்கை மாற்றி விட்டு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தியுள்ளது.;
இந்து எழுச்சி முன்னணி தேனி நகர செயலாளர் பிரேம் தலைமையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் பொது நல மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தேனி மாவட்டத்தில் தப்புகுண்டு கிராமத்தில் தமிழக அரசு சட்டக் கல்லூரி, கால்நடை மருத்துவர் பல்கலைக் கழகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மற்றும் ஐடிஐ போன்ற தமிழக அரசின் கல்வி நிறுவனங்கள் பெருமளவு அப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவற்றை பயன்படுத்தி கல்வி கற்று வருகின்றனர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்தப்பகுதியில் மாணவர்களுக்கு இடையூறாகவும் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும்வகையிலும் மாணவர்களின் உடல்நலனை பாதிக்கும் வகையிலும் அங்குள்ள நிலத்தடி நீரை மாசுபடுத்தி உபயோகப்படுத்துவதற்கு இயலாத வகையில் மாற்றும் தேனி அல்லிநகரம் நகராட்சி குப்பை கிடங்கு மற்றும் வீரபாண்டி பேரூராட்சி குப்பை கிடங்குகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இதனால் அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளால் மழைக்காலங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது. இதனால் அங்குள்ள விவசாய நிலங்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கால்நடைகளுக்கும் நோய் தாக்கம் ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகையினால் அந்த பகுதியில் உள்ள ஏராளமான மாணவர்கள் இயல்பாக மூச்சு விடுவதற்கு கூட இயலாத ஒரு நிலை உள்ளது. குப்பை கிடங்குகளின் அருகாமையில் பிரசித்தி வாய்ந்த ஶ்ரீசடேஸ்வரர் கோயில் உள்ளது. அங்கு வழிபாடு செய்ய ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
எனவே எதிர்கால இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அமைதியுடன் ஆத்மசாந்தியுடன் வழிபாடு செய்வதற்கும் அப்பகுதியினை சுற்றுச் சூழலில் சிறந்தஒரு பகுதியாகவும் மாற்ற வேண்டும். தேனி மாவட்டத்தில் கல்வி நிறுவன குழுமங்கள் நிறைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் சட்டக் கல்லூரியின் பின்பகுதியில் 400 ஏக்கர் பரப்பளவிற்கு தொழிற்பேட்டை அமைப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. அவ்வாறு தொழிற்பேட்டைக்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கு தென் கீழ் பகுதியில் கரடு அமைந்துள்ளது. அந்த கரட்டினை ஒட்டி கூட இந்த குப்பை கிடங்குகளை மாற்றம் செய்து மாணவர்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
தற்போது உள்ள குப்பை கிடங்கு பகுதியினை மாணவர்கள் விளையாடுவதற்கான பெரியளவு மைதானங்களாக மாற்றுவதற்கும் நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டும். இந்து எழுச்சி முன்னணி நகர தலைவர் செல்வபாண்டி , நகர அமைப்பாளர் அரண்மனை முத்துராஜ் , நகரத் துணைத்தலைவர்கள் சிவா , நாகராஜ் , நகர துணைச் செயலாளர்கள் சீனிவாசன் , சரவணன் , இராமகிருஷ்ணன் , அரண்மனை ஜீவா , செயற்குழு உறுப்பினர்கள் அரண்மனை செல்வகுமார், சூர்யா , வீரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.