தீயணைப்பு படையினருக்கு மலையேற்ற பயிற்சி; 50 மலைக்கிராம இளைஞர்களுக்கு மீட்பு பயிற்சி..!
Theni District News-தீயணைப்பு படையினருக்கு மலையேற்றப்பயிற்சியும், 50 மலைக்கிராம இளைஞர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.;
Theni District News-தேனி மாவட்டத்தின் மொத்தப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதிகள் உள்ளன. இதில் மிகப்பெரிய அடர்ந்த வனப்பகுதிகள் அதிகமாக உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி குரங்கனி மலைப்பகுதியில் டிரக்கிங் சென்ற 22 பேர் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தனர். அப்போது இவர்கள் விபத்தில் சிக்கிய இடத்தை கண்டறியவும், இவர்களை மீட்கவும், போலீசார், தீயணைப்பு படையினர் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
இதனை தொடர்ந்து இனிமேல் இது போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் அப்பகுதியில் மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்ள தீயணைப்பு படை, வனத்துறை, போலீஸ் நிர்வாகங்கள் தயாராக உள்ளன. இது குறித்து தீயணைப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: தேனி மாவட்ட தீயணைப்புத்துறையில் 147 பேருக்கு தீவிர மலையேற்றப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தவிர வனப்பகுதிகளுக்குள் உள்ள 50க்கும் மேற்பட்ட மலைக்கிராம இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு தீ, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களை ஒருங்கிணைத்து மீட்பு பணிகளில் ஈடுபடுத்த தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தவிர மாநிலம் முழுவதும் உள்ள வனத்துறையினருக்கு இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விதம் குறித்து வைகை வனவியல் பயிற்சி கல்லுாரியில் தீயணைப்பு படை அதிகாரிகள் பயிற்சிகளை வழங்கி உள்ளனர்.
8 பிரிவுகளாக இந்த பயிற்சிகள் நடந்து முடிந்துள்ளன. தவிர தீ விபத்து ஏற்பட்டு புகை சூழ்ந்த பகுதிகளுக்குள் செல்லும் மீட்பு படையினருக்கு வழங்க ‛‛பிரீத்திங் அப்பேரடஸ்’’ என்ற புகை மூட்டத்திற்குள் சுவாசிக்க பயனபடும் நவீன கருவிகள் கொள்முதல் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர மழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் காலங்களில் பாதைகளின் மீட்பு பணிக்கு இடையூறாக பாதைகளின குறுக்கே விழுந்து கிடங்கும் ராட்சத மரங்களை அறுத்து அகற்றும் ‛‛பவர் கட்டர்கள்’’ தயாராக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினர்.