தேனி பள்ளியில் ஆயிரம் மரங்களுடன் மூலிகை தோட்டம்: பறவைகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரம் மரங்களுடன் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-04 12:30 GMT

தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மூலிகை தோட்டம்.

தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரம் மரங்களுடன் மூலிகை தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு அபூர்வ வகை மூலிகைகளும் வளர்க்கப்படுகின்றன.

தேனி நகரின் மையப்பகுதியில் 20.46 ஏக்கர் பரப்பளவில் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1919ம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டு, 1943ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்து, 1978ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது இப்பள்ளியில் 3728 மாணவர்கள் படிக்கின்றனர். 88 ஆசிரியர்கள் உட்பட 120 பேர் பணிபுரிகின்றனர். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் அரசு உதவி பெறும் இப்பள்ளி தேனியின் சுற்றுச்சூழலுக்கு முன்மாதிரி பள்ளியாக திகழ்கிறது. இப்பள்ளியில் அதிகளவு இடம் இருப்பதால் பள்ளி தொடங்கப்பட்ட காலத்திலேயே அரசமரம், புங்கை, வேம்பு, தோதகத்தி, மூங்கில், மருதமரம், தென்னை, வாதாங்கொட்டை, கொய்யா, விசிறி வாழை போன்ற மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. மொத்தம் ஆயிரம் மரங்களுக்கு மேல் இப்பள்ளி வளாகத்தில் மட்டும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விவசாயம் தொடர்பான பாடங்கள் நடத்தப்படுகிறது. இதில் ஆக்ஸிஜன் சுழற்சி, காற்று மாசு, இயற்கைவளம், உலக வெப்பமயமாதல், போன்ற பல பிரிவுகளில் பாடம் நடத்தப்படுகிறது. இதற்கு இந்த மரங்கள் பேரூதவியாக உள்ளது என பள்ளி செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன் மற்றும் இதர நிர்வாகிகளின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தருவதோடு, இயற்கை வளங்கள் குறித்த அறிவை வளர்க்கவும் பெரும் முயற்சி எடுத்து வருகிறோம். இதற்காக பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் பெரிய மூலிகை தோட்டம் போட்டுள்ளோம்.

இந்த மூலிகை தோட்டத்தில் மட்டும் சிறியாநங்கை, ஓமவல்லி, முடக்கத்தான், செம்பருத்தி, இட்லிப்பூ, லட்சக்கொட்டைக்கீரை, அடுக்கு செம்பருத்தி, துளசி, பச்சிலை, ரோஜா, மல்லிகை, துாதுவளை, முள்முருங்கை, நொச்சி, பொன்னாங்கன்னி, பன்னீர், முள்முருங்கை, பன்னீர் உட்பட பல வகையான மூலிகைகளை வளர்க்கிறோம். பாட வேலைகளில் மாணவர்கள் இங்கு அழைத்து வரப்பட்டு, ஆசிரியர்கள் மூலம் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. எங்களது இந்த முயற்சிக்கு மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்பள்ளி வளாகத்தில் மிகவும் உயர்ந்து வளர்ந்துள்ள மரங்கள் அடர்த்தியாக அதிகளவு வனம் போல் உள்ளது. இதனால் பறவைகள் அதிகளவு வருகின்றன. இங்கு பல்வேறு வகையான அபூர்வ வகை பறவைகளையும் பார்க்கலாம். பறவைகள் தண்ணீர் குடிக்கவும், உணவுக்காகவும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து, இதனை பராமரிக்க கூட தனி அலுவலர்களை நியமித்துள்ளோம் என்றார்.

Tags:    

Similar News