தேனி மாவட்டத்தில் காற்றுடன் பலத்த மழை: 7 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன

தேனி மாவட்டம் கோட்டூரில் பெய்த பலத்த மழையால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன.

Update: 2023-03-21 15:42 GMT
தேனி மாவட்டம் கோட்டூரில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் சாய்ந்த வாழை மரங்கள்.

தேனி மாவட்டத்தில் காற்றுடன் பெய்த மழையால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.

தேனி மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. சராசரி வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை தாண்டி விட்டது. வெயில் சுட்டெரிப்பால் அனல்காற்றும் வீசுகிறது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக இரவு நேரங்களில் தேனி மாவட்டம் பெரியகுளம், சோத்துப்பாறை, போடி  உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இன்றும் வழக்கம் போல் காலை முதல் வெயில் சுட்டெரித்தது. இன்று மதியம் 3 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் திடீரென குறைந்தது. மேகமூட்டம் ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் மேகமூட்டம் இருந்தாலும் மாலையில் கோட்டூரில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இதில் கோட்டூரில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மின்கம்பங்களும் சாய்ந்தன. மின் இணைப்புகள் முழுக்க துண்டிக்கப்பட்டது. கோட்டூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் கிராம மக்கள் விவசாயிகளை விளைநிலங்களுக்கு செல்ல வேண்டாம். மின்வயர் அறுந்து கிடக்கிறது என எச்சரித்தனர். மின்வாரியத்திற்கு மக்கள் தகவல் கொடுத்தனர். மின்வாரியத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அறுந்து கிடந்த மின்வயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பூமலைக்குண்டு, தர்மாபுரி உள்ளிட்ட கிராமங்களிலும் மழை பெய்தது. இங்கு சேத விவரம் எதுவும் தெரியவில்லை. கொடுவிலார்பட்டியில் வீசிய பலத்த காற்றில் புளியமரம் ரோட்டில் சாய்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் ஏற்பட்ட சேத விவரங்களை வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை இணைந்து மதிப்பீடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News