தேனி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி

தேனி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.

Update: 2022-07-17 14:18 GMT

தேனி மாவட்டத்தில் அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லை. தி.மு.க.வில் தற்போது தேர்தல் முடிந்து விட்டாலும், முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் படபடப்புடனே வாழ்ந்து வருகின்றனர். தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு தான் கடும் போட்டியும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. யார் தலை உருளப்போகிறதோ, யார் தலைமையேற்க போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் அ.தி.மு.க.,வில் ஒ.பி.எஸ்.,சும் அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் முழுமையாக ஓரம் கட்டப்பட்டுள்ளதால், அடுத்த ரேஸ் தொடங்கி உள்ளது. தேனி மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக இருந்த சையதுகான் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அடுத்த மாவட்ட செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குறிப்பாக முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையனும், தேனி நகர செயலாளரும் வக்கீலுமான கிருஷ்ணகுமாரும் இந்த ரேசில் முன்னணியில் நிற்கின்றனர். காரணம் கிருஷ்ணகுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பகிரங்கமாக ஓ.பி.எஸ்-க்கு எதிராக  குரல் கொடுத்து இ.பி.எஸ்-க்கு பகிரங்க ஆதரவு கொடுத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையனும் இ.பி.எஸ்.,க்கு மிகவும் வேண்டப்பட்டவர்.

இந்நிலையில் தேனி மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக யார் வரப்போகிறார்கள் என்பதில் இவர்கள் இருவரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருமே இ.பி.எஸ்-க்கு இரு கண்கள் போன்றவர்கள் என்பதால், தி.மு.க. பாணியில் தேனி மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்து தெற்கு மாவட்டத்திற்கு ஜக்கையனையும், வடக்கு மாவட்டத்திற்கு கிருஷ்ணக்குமாரையும் நியமிக்கலாம் என மேலிடம் முடிவு செய்திருப்பதாக அ.தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஓ.பி.எஸ்., அணிக்கு முட்டுக்கொடுக்கவும், எதிர் அரசியல் நடத்தவும் கிருஷ்ணக்குமார் சரியான தேர்வாக இருப்பதாக மேலிடம் கருதுவதாகவும் தேனி மாவட்ட அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News