தேனி வி.ஐ.பி.,க்களை கவர்ந்த77 வயது சூப் ஆறுமுகச்சாமி..!
தேனியில் ஆறுமுகச்சாமி என்ற முதியவர் நடத்தி வரும் சூப் கடையில் வி.ஐ.பி.,க்கள் ஏராளமானோர் கஷ்டமர்களாக உள்ளனர்.
தேனியில் சமதர்மபுரத்தை ஒட்டிய பங்கஜம் ஹவுஸ் ரோட்டில் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் செயல்பட்டு வருகிறது. இந்த கடை முன்பு சிறிய அளவில் சூப் கடை நடத்தி வருகிறார் ஆறுமுகச்சாமி. இவருக்கு வயது தற்போது 77. இந்த வயதில் மதியம் இரண்டு மணிக்கு சூப் தயாரிக்க தொடங்கி, காளான் சூப், காய்கறி சூப், வாழைத்தண்டு சூப் என பல்வகை சூப்களை தயாரித்து கொண்டு வந்து மாலை 4 மணிக்கு கடை போட்டு விடுவார். இரவு 8 மணிக்கு சூப் தீர்ந்து விடும்.
யார் சூப் கேட்டாலும், சூப்பினை அளந்து சுட வைத்து, கான்பிளாக்ஸ் பொறி போட்டு கொடுப்பார். ஒரு கப் 15 ரூபாய், பெரிய கப் என்றால் 20 ரூபாய். மற்ற கடைகளில் வழங்குவது போல் இவரது சூப் ‘கொழகொழவென’ இருக்காது. பியூர் வாட்டர் போல் சூடாக இருக்கும். உள்ளே சூப்பிற்கு ஏற்ப காளான், காய்கறி, வாழைத்தண்டுகள் சிறியதாக நறுக்கி போட்டிருப்பார். சூப் நல்ல சூட்டில் இருக்கும். ஒரு வித்தியாசமான காரம், மணத்துடன் குடிக்க சூப்பராக இருக்கும்.
குறிப்பாக தேனி வி.ஐ.பி.,க்கள் பலர் கார்களில் வந்து இறங்கி இவரிடம் சூப் வாங்கி குடிப்பார்கள். பெரியவர்கள் மட்டுமல்ல. குட்டீஸ்களுக்கும் இந்த தாத்தா போட்டு தரும் சூப் என்றால் கொள்ளை பிரியம். அதுவும் பலமுறை தாத்தா மக்காச்சோள பொறி போட்டு தாங்க என பொறியினை கேட்டு வாங்கி குடிப்பார்கள்.
பல ஆண்டுகளாக தனி நபராக இந்த சூப் கடையினை நடத்தி வருகிறார். இப்போது ஏழுபத்தி ஏழு வயதாகி விட்ட நிலையிலும், யாருடைய உதவியையும் கேட்பதில்லை. அவர் தனது வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இவரது தன்னம்பிக்கையினை ஊக்குவிக்கவோ, பாராட்டவோ, உதவவோ என்ன காரணம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பாகுபாடு இன்றி பலரும் இவரிடம் சூப் வாங்கி குடிக்கின்றனர்.
தேனிப்பக்கம் வந்தால் இவரிடம் நீங்களும் சூப் வாங்கி குடித்து பாருங்கள். அசந்து போவீங்க. வெள்ளிக்கிழமை தோறும் சூப் கடைக்கு வார விடுமுறை. அதனை மறந்து விடாதீர்கள்.