மீண்டும் ஊரடங்கிற்கு தயாராகிறது தமிழகம்
ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஓரிரு நாளில் ஊரடங்கு அமலாகலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்;
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரையை செயல்படுத்த சுகாதாரத்துறை தயாராகி வருகிறது.
கொரோனா முதல் அலை இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் எட்டு மாதங்கள் வரை நீடித்தது. இரண்டாம் அலை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தினாலும் 5 முதல் ஆறு மாதங்கள் வரை நீடித்தது. ஆனால் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மூலம் ஏற்படும் மூன்றாவது அலை அதிக காலம் நீடிக்காது.
மிகவும் குறைந்த காலத்திலேயே ஒமைக்ரான் அலை முடிவுக்கு வந்து விடும். ஆனாலும் அந்த குறுகிய காலத்தில் அத்தனை பேரையும் ஒமைக்ரான் தொட்டு விடும் வாய்ப்புகள் உள்ளது. இதன் தீவீரத்தன்மை பற்றிய முழு விவரங்கள் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. புரியவும் இல்லை. இதுவரை ஒமைக்ரான் கொரோனாவிற்கு எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரம் யாரிடமும் இல்லை.
ஆனால் பல நாடுகளில் இறந்தவர்களில் சிலரது உடலில் ஒமைக்ரான் வைரஸ்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் இறப்பிற்கு ஒமைக்ரான் காரணமாக என்பதும் தெரியவில்லை. ஒமைக்ரான் வைரஸ் முழுமையாக பரவிய நாடுகளில் இதுவரை பெரிய அளவில் இழப்புகள் ஏற்பட்டதாக பதிவுகள் ஏதும் இல்லை.
ஆனாலும் இந்தியா போன்ற மக்கள் நெருக்கம், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒமைக்ரான் தாக்கம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இறப்பு இருக்கிறதோ இல்லையோ, ஒமிக்ரான் அலை தோன்றினால் பரவல் வேகம் காரணமாக பாதிப்புகள் கிடுகிடுவென மதிப்பிட முடியாத அளவிற்கு உயரும் என்பது மட்டும் திட்டவட்டமான உண்மை.
ஒமைக்ரான் பாதித்த பலருக்கு வந்த அறிகுறியே தெரியாமல் குணமாகி விடும், சிலருக்கு லேசான அறிகுறி காட்டும், மிக, மிக குறைந்த சதவீதம் பேருக்கு மட்டுமே மருந்து, மாத்திரைகள் தேவைப்படும் என இதுவரை மதிப்பிடப்பட்டுள்ளது. (இதன் அளவீடுகள் எதிர்காலத்தில் மாறலாம். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் மிக, மிக குறைந்த சதவீதம் என்பதே பல லட்சங்களை தொடும். அந்த அளவு மக்கள் தொகை உள்ளது. இத்தனை பேருக்கும் மருந்து, மாத்திரைகள் கொடுத்து சமாளிப்பது மிகப்பெரிய சவாலான வேலை ஆகும்.
எனவே கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் பாதிப்பின் தீவிரத்தையும், வேகத்தையும் சற்று குறைக்க முடியும் என சுகாதாரத்துறை திட்டவட்டமாக நம்புகிறது. எனவே மாநிலங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு கட்டமாக ஊரடங்கு படிப்படிப்படியாக அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கு தொடங்கிய பின்னர், ஒமைக்ரானின் தீவிர பரவல் தன்மையை பொறுத்து கட்டுப்பாடுகளை படிப்படியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விரைவில் தமிழகத்திலும் ஊரடங்குகள் அமல்படுத்தப்படலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக கூறுகின்றனர். விரைவில் மூன்றாம் கட்ட ஊரடங்கிற்கு தமிழகம் தயாராகி வருகிறது. அதன் அளவீடு எப்படி என்பது ஓரிரு நாட்களிலேயே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.