இலந்தை பழம் சாப்பிட்டிருப்பீங்க... இலந்தை காய் சாப்பிட்டிருக்கீங்களா?...
தேனி மாவட்டம், குச்சனுாரில் நடந்து வரும் சனீஸ்வரபகவான் கோயில் திருவிழா திடலில் எலந்தை காய் விற்கப்படுகிறது.
தேனி மாவட்டம், விவசாயம் அதிகம் நடக்கும் தோட்டக்கலை மாவட்டம் தான். ஆனால் இங்கு எலந்தை பழம் போன்ற மலைக்காய்கறிகள், பழவகைகள் விளையாது. ஆடி மாதம், சனிக்கிழமை தோறும் நடைபெறும் குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயில் விழாவில், தமிழகம் முழுவதும் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் வருவார்கள். இப்படி வெளியூர் கோயில்களுக்கு செல்பவர்கள், தங்கள் ஊரில் கிடைக்காத உணவுப்பொருட்கள், விவசாய விளை பொருட்கள் கிடைத்தால் விரும்பி வாங்குவார்கள். இதனை புரிந்து கொண்ட விவசாயிகள், அத்தனை பேரையும் கவர வித, விதமான பொருட்களை விற்பனை செய்வார்கள்.
இப்படி நடக்கும் விற்பனையில் ஒன்று தான் இலந்தை காய். இலந்தை பழம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன இலந்தை காய் என்கிறீர்களா? பார்க்க மிக, மிக கொய்யாப்பழம் போல் இருக்கும். சாப்பிட்டால் பேரிக்காய், கொய்யாக்காயினை ஒரு சேர சாப்பிட்டது போல், நறுச்நறுச் என ஒரு வழவழப்பு கலந்த இனிப்புச்சுவையுடன் இருக்கும். ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கின்றனர். ஆனாலும் வாங்கி சாப்பிட்டால்... விரும்பி சாப்பிட்டுக் கொண்டே இருக்க தோன்றும். அந்த அளவு இந்த காயின் சுவை இருக்கும்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் இந்த பேரிக்காயினை சிறு வியாபாரிகள் தோட்டங்களுக்கே சென்று வாங்கிக் கொண்டு வந்து விற்கின்றனர். கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் இந்த இலந்தை காயினை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் கோயிலுக்கு வருபவர்கள், இரும்பு பொருட்களையும் வாங்கிச் செல்கின்றனர். காரணம் இரும்பு பொருட்கள் சனிபகவானின் அம்சமாக இருப்பவர். தெய்வங்களில் மிகவும் கருணை வாய்ந்தவர் என சனீஸ்வர பகவானுக்கு ஒரு பெயர் உண்டு.
அந்த பகவானை வீட்டில் வைத்து வழிபட முடியாது. ஆனால் அவரது அம்சமான இரும்பு பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்பதால், கோயில் திடலில் இருந்து ஒரிரு இரும்பு பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதனை உணர்ந்து சிலர் வீடுகளில் சமையல் அறைகளில் பயன்படும், காய் வெட்ட பயன்படும் அரிவாள், தேங்காய் சில் எடுக்கும் அரிவாள், தோசைக்கல், ஆம்லெட் போட இரும்பு கடாய், தாளிக்க, குழம்பு வைக்க இரும்பு கடாய் என பல்வேறு பொருட்களை விற்கின்றனர். இதையும் விரும்பி பக்தர்கள் வாங்குகின்றனர். அடுத்து ஆச்சர்யப்பட வைத்த விஷயம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு விற்கப்படும் பல்வேறு வகையான பூச்செடி நாற்றுகளையும் வாங்கிச் செல்கின்றனர். ஒரு நாற்று 30 ரூபாயில் இருந்து பூக்களின் வகைகளுக்கு ஏற்ப 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனை அதிகமானோர் வாங்கிச்செல்வதையும் காண முடிந்தது. மொத்தத்தில் ஆடி மாதம் என்றாலே திருவிழாக்கள் நிறைந்த மாதம் என்பதும் அவற்றில் இது போன்ற நிகழ்வுகளும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன என்பதே நிதர்சனம்.