பொங்கல் விடுமுறை முடிந்து, சென்னைக்கு ரிட்டன் வர்றீங்களா..?
நீங்கள் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இறங்க தேவையில்லை.. இதை படிங்க...!;
பொங்கல் முடிந்து சென்னைக்கு ரிட்டன் வரப்போறீங்களா..? உங்களுக்குத்தான் இந்த தகவல். சென்னைக்குள் நுழைந்ததும், மின்சார ரயிலில் ஏறி உங்கள் வீட்டிற்கு போக விரும்புகிறீர்கள் என்றால், கிளாம்பாக்கத்தில் இறங்க வேண்டியதில்லை.
அதற்கு முன்பே இறங்க வேண்டும். இதைப் பற்றி பார்ப்போம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வந்தது. 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் 2018-ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது.
கோயம்பேடு போல் இல்லாமல், பேருந்துகளை நெரிசல் இன்றி நிறுத்தவும், பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அதிநவீன வசதியுடன் அழகிய வடிவத்தில் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்படுகிறது.
பொங்கல் முடிந்து நாளை முதல் பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்.. அப்படி வருவோரை ஆம்னி பேருந்துகளில் ஏறினால் சென்னைக்குள் காலை 6 அல்லது 7 மணிக்கு மேல் வந்தால் விடமாட்டார்கள்.. அதேபோல் அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும்.
இப்படியான சூழலில் அரசு பேருந்துகளில் வருவோர். கிளம்பாக்கம் வந்து, அதன்பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரயில் நிலையம் போக 1.5 கிலோமீட்டர் தூரம் வேண்டும். அவ்வளவு தூரம் பைகளை வைத்துக் கொண்டு பயணிக்க முடியாது..
எனவே சென்னைக்குள் நுழையும் போதே பொத்தேரியில் இறங்கி கொள்ளுங்கள். பொத்தேரி ரயில் நிலையம் ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு இறங்கி அப்படியே உள்ளே நுழைந்து எளிதாக புறநகர் ரயில்களில் ஏறி திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர், திநகர், தாம்பரம், பல்லாவரம், விமான நிலையம், கிண்டி, கோடாம்பாக்கம், நுங்கம்பாக்கம் என சென்னையின் எந்த பகுதிக்கும் மின்சார ரயிலில் எளிதாக போக முடியும்.
சென்னையில் பொத்தேரிக்கு அடுத்து உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் மெயின்ரோட்டில் இல்லை. உள்ளே சென்று ஏற வேண்டியதிருக்கும். அதுமட்டுமின்றி கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. ஊரப்பாக்கத்தில் அல்லது வண்டலூரில் இறங்கி தான் மாற வேண்டியதிருக்கும். அதனால் அரசு பேருந்து ஓட்டுநர்களுமே, ரயிலில் செல்ல விரும்புவோரின் வசதிக்காக பெத்தேரியில் இறக்கி விடுகிறார்கள். எனவே மின்சார ரயிலில் போக பொத்தேரியில் இறங்கிவிடுங்கள், எளிதாக இருக்கும்.