நிலக்கடலை சீசன் தொடக்கம்: ஒரு படி 30 ரூபாய்
தேனி மாவட்டத்தில் நிலக்கடலை சீசன் தொடங்கிய நிலையில் ஒரு படி நிலக்கடலை 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.;
தேனி மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் அறுவடை தற்போது தொடங்கி உள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் பறித்த நிலக்கடலையினை முன்பு கமிஷன் கடைக்கு அனுப்பி விற்பனை செய்வார்கள்.
தேனி, தேவதானபட்டி, டி வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, மஞ்சளார், சில்வார்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் விவசாய தொழிலே பிரதான தொழிலாக உள்ளது. நிலக்கடலை விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர். சாரல் மழையின் காரணமாக நிலக்கடலை செடிகள் விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இப்பகுதிகளில் போதிய அளவு மழை பெய்து வந்ததால் விளைச்சல் அதிகரித்தது. தற்போது நிலக்கடலை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலக்கடலை விவசாயத்தில் விளைச்சல் அதிகரித்து கட்டுபடியான விலை கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பறிக்கப்பட்ட நிலக்கடலை கிலோ 1க்கு ரூ.30 முதல் ரூ.35 வரை வெளி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இப்பகுதியில் விளையும் நிலக்கடலை திரட்சியாகவும் அதிக விளைச்சலும், கட்டுபடியான விலையும் கிடைப்பதால் நிலக்கடலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது நிலக்கடலையினை சாலையோரம் குவித்து வைத்து சாலையில் செல்பவர்களுக்கு நேரடியாக விற்பனை செய்கின்றனர். பறித்த உடனே கிடைத்த பச்சை நிலக்கடலை ஒரு படி ( ஒரு கிலோ 250 கிராம் வரை இருக்கும். பருப்பின் திரட்சி, சத்துப்பிடிப்பை பொறுத்து எடை அளவு மாறும். இதனால் படிக்கணக்கில் விற்கின்றனர்.) 30 ரூபாய்க்கு விற்கின்றனர்.
காரில் செல்பவர்கள், இதர வாகனங்களில் செல்பவர்கள் குறைந்தது 4 படி, 5 படி என வாங்கிச் செல்கின்றனர். இதனால் பறித்த அன்றே நிலக்கடலை விற்பனையாகி விடுகிறது. தேனி மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கும் நிலக்கடலை அனுப்பி வைக்கப்படுகிறது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.