நகைக்கடன் தள்ளுபடியில் பெரும் தில்லுமுல்லு: குவியும் புகார்கள்
தேனி மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடியில் பெரிய அளவில் தில்லுமுல்லு நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.;
தமிழக அரசு அறிவித்த படி கூட்டுறவு சங்கங்களில் 40 கிராம் வரை நகைகளை அடமானம் வைத்தவர்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். ஒரு கிராம் கூடுதலாக நகை அடகு வைத்திருந்தாலும் தள்ளுபடி கிடைக்கும். எத்தனை கணக்கில் ஒருவர் நகைக்கடன் வாங்கியிருந்தாலும், அத்தனை கணக்கிலும் உள்ள நகைகள் ஒன்றாகவே கணக்கிடப்படும்.
இப்படி கணக்கிடும் போது பலருக்கு 40 கிராம் நகைகளை விட கூடுதல் நகைகள் கணக்கில் வந்து விடுகின்றன. இவர்கள் கடன் தள்ளுபடி பெறும் தகுதியினை இழக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 52784 பேர் இப்படி தள்ளுபடி பெற தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 27 ஆயிரத்து 997 பேருக்கு மட்டும் 107.41 கோடி ரூபாய் மதிப்பில் நகைகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
நகை தள்ளுபடி செய்ய ஒரு நபரிடம் குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகாரிகள் பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாத்திற்கு புகார்கள் குவிந்து வருகின்றன. தவிர தள்ளுபடிக்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் எக்காரணம் கொண்டும் பணம் கொடுத்து ஏமாற வேண்டும். ஏனெனில் தற்போதய கணக்கில் அனைத்து விவரங்களும் துல்லியமாக மதிப்பிடப்பட்டுள்ளன. ஒரு கிராம் நகை கூடுதலாக இருந்தாலும் அவர்களுக்கு தள்ளுபடி கிடைக்காது என கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பலர் கூறுகின்றனர்.
இந்நிலையில் கலெக்டர் தலைமையில் நடக்கும் மனுநீதிநாளில் வரும் மனுக்களில் 50 சதவீதம் மனுக்கள் இந்த தள்ளுபடி தொடர்பாகவே வருகின்றன. எனவே கலெக்டர் முரளீதரன், இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, பெரியகுளம், உத்தமபாளையம் துணைப்பதிவாளர்கள், மாவட்ட இணைப்பதிவாளர், மத்திய வங்கி பொதுமேலாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் அடங்கிய மேல்முறையீட்டு குழு அமைத்துள்ளார். தள்ளுபடி கிடைக்காதவர்கள் வரும் ஏப்., 20ம் தேதிக்குள் இக்குழுவிடம் விண்ணப்பிக்கலாம். தகுதி இருந்தால் அவர்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.