அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள், வியாபாரிகள் கூட்டுக்கொள்ளை
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் அதிகாரிகளும், வியாபாரிகளும் கூட்டுக்கொள்ளை அடித்து வருகின்றனர்.
''விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது, கமிஷன் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்''. இந்த பிச்சையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோர்ட் கடுமையாக கண்டித்த பின்னர், அரசு ஐம்பத்தி ஆறு பேரை பணி நீக்கம் செய்து, நடவடிக்கை எடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் இந்த பிச்சையும், கூட்டுக்கொள்ளையும் இன்னமும் நடந்து கொண்டே தான் இருக்கிறது என -0விவசாயிகள் கொந்தளிக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் தற்போது நெல் விளையும் இடங்களில் எல்லாம் தேவைக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு மத்திய அரசு ஒரு கிலோவிற்கு 19 ரூபாய் 60 பைசாவும், மாநில அரசு ஒரு ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்குகிறது. அதாவது ஒரு கிலோ நெல்லுக்கு அரசு கொள்முதல் நிலையத்தில் 20 ரூபாய் 60 காசு பணம் கிடைக்கிறது. தவிர ஒரு மூடை (40 கிலோ) நெல் கொள்முதல் செய்ய சாக்கு, சுமைகூலி உட்பட அனைத்து செலவுகளுக்கும் அரசு 32 ரூபாய் வழங்குகிறது.
ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகளும், வியாபாரிகளும் இணைந்து கூட்டுக்கொள்ளை அடித்து வருகின்றனர். பல இடங்களில் வியாபாரிகள் விவசாயிகளிடம் கிலோ 18 ரூபாய் வீதம் நெல் வாங்கி, அதனை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று 20 ரூபாய் 60 பைசாவிற்கு விற்கின்றனர். ஒரு கிலோவிற்கு இதன் மூலம் வியாபாரிகளுக்கு 2 ரூபாய் 60 காசு பணம் கிடைக்கிறது. இதில் ஒரு சிறு பகுதியை அதிகாரிகளுக்கும் கொடுத்து விடுகின்றனர். இப்படி வியாபாரிகளிடம் நெல்லை கொடுப்பதற்காகவே விவசாயிகளிடம் கொள்முதல் நிலைய அதிகாரிகள் பல்வேறு காரணங்களை சொல்லி, அவர்கள் கொண்டு வரும் நெல்லை திட்டமிட்டு நிராகரிக்கின்றனர்.
வேறு வழியின்றி அந்த விவசாயிகள் நெல்லை வியாபாரிகளிடம் விற்கின்றனர். வியாபாரிகளுக்கு எப்படியே இதற்கு தேவையான அத்தனை ஆவணங்களும் கிடைத்து வி டுகின்றன. ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நெல்லை, வியாபாரிகள் மூலம் அதிகாரிகள் வாங்கிக் கொள்கின்றனர். கோர்ட் பகிரங்கமாக கண்டித்தும், அரசு கிடுக்குப்பிடி நடவடிக்கை எடுத்தும், இன்னும் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் இந்த நிலை தான் காணப்படுகிறது. விவசாயிகளை ஏமாற்றுவதை எப்போது தான் நிறுத்தப்போகிறார்களோ தெரியவில்லை என விவசாயிகள் பலர் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.