ஓதுவார்களாக மாறிய அரசு அதிகாரிகள்!
தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் பலர் ஓதுவார்களாக மாறி இறை பணி செய்து வருகின்றனர்.;
தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ராஜாராம், பால்வண்ணன், சேகர், சுருளிவேலப்பர், அருஞ்சுனைக்கனி உட்பட 12 பேர் ஓதுவார்களாக பயிற்சி பெற்று இறைபணி செய்து வருகின்றனர். இவர்கள் போலீஸ்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை போன்ற அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோயில், கும்பாபிஷேகம், புதுமனை புதுவிழா, இதர வீட்டு விசேசங்கள் அனைத்திலும் இவர்கள் தேவாரம், திருவாசகம் ஓதி பாராயணம் செய்கின்றனர். இவர்களுடன் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும் இணைந்துள்ளனர்.
இதனால் ஒரு வீட்டிலோ, கோயிலிலோ இவர்கள் பாராயணம் செய்தால், அந்த பகுதியே இறை சூழல் மிகுந்ததாக மாறி விடுகிறது. இவர்கள் அடிக்கடி லட்சுமிபுரம் ஷீரடி சாயிபாபா ஆலயத்தில் கூடி தேவாரம், திருவாசகம் பாடுகின்றனர். இதற்கென இவர்கள் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை என்பது மிகவும் சிறப்புக்குரிய விஷயம். குறைந்தது ஒரு நாள் பாராயணம் முடிக்க 7 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் பாராயணம் செய்யும் இடத்தில் டீ, காபி, வடை, ஒரு நேர உணவு மட்டும் வழங்குகின்றனர். இதனை தவிர்த்து இவர்கள் எந்த கட்டணமும் பெறுவதில்லை.
பாராயணம் செய்யும் இடத்திற்கு சென்று வருவதற்கு பெரும்பாலும் டூ வீலர்களை பயன்படுத்துகின்றனர். இதற்குரிய பெட்ரோல் செலவு கூட பெற்றுக் கொள்வதில்லை. இந்த அளவு சிறப்பு மிகுந்த இறைபணியினை செய்து வருகின்றனர். பாராயணம் செய்யும் ஓதுவார் ராஜாராம் கூறியதாவது: தேவாரத்தில் 18 ஆயிரம் பாடல்கள் உள்ளன. திருவாசகத்தில் 658 பாடல்கள் உள்ளன. மொத்தம் 51 பதிகங்கள் உள்ளன. தேனி மாவட்டத்தில் குறைந்தது மாதம் 20 நாட்களாவது பாராயணம் நடக்கும். பெரும்பாலும் கோயில்களில் இருந்து தான் எங்களுக்கு அழைப்பு வரும். யாராவது சிலர் மட்டுமே வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்கள். எங்கு அமர்ந்து தேவாரம், திருவாசகம் பாடினாலும் சிவனே வந்து அமர்ந்து கேட்பார் என்பது தான் ஐதீக நடைமுறை. இதனால் சிவன் வந்து அமர பாராயணம் செய்யும் இடத்தில் தனியாக இடம் ஒதுக்கி, துணி விரித்து பூ துாவி வைப்போம். குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை பாராயணம் பாடும் போது, அந்த பகுதியில் சூழலே இறைசக்தி நிறைந்ததாக மாறி விடுகிறது. இதனை உணர்ந்ததாக பலர் எங்களிடம் கூறியது பெருமையாக இருந்தது. இலவசமாக தேவாரம், திருவாசகம் பாட ராஜாராம் என்ற ஓதுவாரை 74491 31101 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.