தேனியில் சாக்கடையில் தினமும் தங்கம் சேகரிக்கும் பொதுமக்கள்..!

தேனி எடமால் தெரு, பகவதியம்மன் கோயில் தெருக்களில் உள்ள சாக்கடையில் மூதாட்டிகள் சிலர் தங்க துகள்களை சேகரித்து வருகின்றனர்.

Update: 2023-12-14 04:49 GMT

தேனி எடமால் தெரு கழிவுநீர் வெளியேறும் ராஜா தெருவில் சாக்கடை நீரில் இருந்து தங்க துகள்களை பிரித்தெடுக்கும் மூதாட்டி.

தேனியில் எடமால் தெரு, பகவதியம்மன் கோயில் தெருக்களில் தங்கநகை பட்டறைகள் அதிகளவில் உள்ளன. இவர்கள் நகை செய்யும் போது தங்க துகள்கள் உதிரும். இந்த துகள்கள் கழிவுநீரோடு கலந்து சாக்கடையில் வரும். தேனியில் சிலர் இந்த சாக்கடை நீரை அள்ளி மணல் நிரம்பிய வடிக்கும் வட்டகையில் ஊற்றி நீரையும், கழிவுகளையும் பிரிப்பார்கள்.

பின்னர் வடிக்கப்பட்ட மணல் துகள்களில் இருந்து தங்க துகள்களை பிரித்து எடுப்பார்கள். தற்போதய நவீன காலத்திலும் இப்படி சாக்கடையில் தங்க துகள்களை பிரிக்கும் பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தங்கதுகள் சேகரிப்பாளர்கள் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்க நகைகளை கைளால் செய்தனர். அப்போது நிறைய தங்க துகள்கள் சாக்கடை நீர் வழியாக வரும். எனவே தினமும் 30 முதல் 40 பேர் வரை துகள்களை சேகரித்தோம். தற்போது தங்க நகைகள் பெரும்பாலும் அச்சில் வார்க்கப்படுகின்றன.

ஒரு சில தங்க நகை பட்டறைகளில் மட்டுமே தங்க நகைகள் தயாரிக்கும் பணிகள் நடக்கிறது. இதில் இருந்து குறைவான துகள்களே கிடைக்கின்றன. தற்போதைய  நிலையில் குறிப்பிட்ட சிலர் மட்டும் சேகரிக்கிறோம். குறிப்பாக இப்போது உள்ள இளம் தலைமுறையினர் சாக்கடை நீரை அள்ளி ஊற்றி தங்க நகை துகள் சேகரிக்கத்  தயாராக இல்லை.

இதனால் வயதான சிலர் மட்டுமே சேகரிக்கிறோம் இந்த துகள்களை தங்கநகை பட்டறைகளில் விற்று அன்று மாலையே பணத்தை கையில் வாங்கி விடுவோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வருவாய் அதிகம் இருந்தது. தற்போது தினமும் 300 ரூபாய்க்கு தேவையான தங்கத் துகள்கள் கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது என்றனர். 

Tags:    

Similar News