தேனி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு இந்து முன்னணி மனு

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலங்களை நடத்த அனுமதி காேரி இந்து முன்னணியினர் தேனி எஸ்.பி.,யிடம் மனு.

Update: 2021-08-25 12:45 GMT
தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் தேனி எஸ்.பி.,யிடம் மனு கொடுத்துள்ளனர்.

வரும் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்றும் அடுத்த இரு நாட்களும் விநாயகர் சிலை ஊர்வலங்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பாக தேனி எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவினை தொடர்ந்து நாடு முழுவதும் ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. தற்போது கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்து மீண்டும் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில், இது மூன்றாவது அலையின் அறிகுறியா, இல்லையா என்பது தெரியாமல் மத்திய, மாநில அரசுகள் கடும் குழப்பத்தில் உள்ளன.

இதனால் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் மட்டும் 700க்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேனி, சின்னமனுார், போடி, கம்பம், ஆண்டிபட்டி உட்பட மாவட்டம் முழுவதும் செப்டம்பர் மாதம் 10, 11, 12ம் தேதிகளில் விநாயகர் சிலை ஊர்வலங்களை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணியின் மதுரை கோட்ட செயலாளர் கோம்பை எம்.கணேசன், மாநில பேச்சாளர் ராஜகுருபாண்டியன், தேனி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜன், மற்றும் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சசிக்குமார், பாலமுருகன், செல்வம், சங்கிலி, ராம்செல்வா, சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரேவை சந்தித்து, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News