நரகலுக்கு நடுவே இறுதி ஊர்வலம்: எப்போது விடிவு கிடைக்கும்?

போடி ஊராட்சி ஒன்றியம் உப்புக்கோட்டையில் நடக்கும் இறுதி ஊர்வலம் குறித்து எங்காவது கேள்விப்பட்டுள்ளீர்களா?

Update: 2023-01-03 05:31 GMT

காட்சி படம் 

தேனி மாவட்டம், போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்புக்கோட்டை கிராமத்தில் நடக்கும் விநோத பிரச்னையை பற்றிய இந்த செய்தியை படித்தால், படிப்பவர்களின் உள்ளம் குமுறி விடும். அப்படி ஒரு விநோத சிக்கல். ஒரு நாள் இரண்டு நாள் இல்லை... கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இப்படி ஒரு பிரச்னை நிலவி வருகிறது.

போடி ஊராட்சி ஒன்றியம் தொடங்கப்பட்டு எப்படியும் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும். ஆண்டு தோறும் தனிநபர் கழிப்பறைகள், பொதுக்கழிப்பறைகள் (ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக) கட்ட நிதி அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த நிதி எல்லாம் எங்கு சென்றது என்பது இதுவரை ஆட்சி செய்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஆனால் தமிழக கிராமங்களின் நிலைமை இன்னும் மாறவே இல்லை. கிராமங்களில் உலர் கழிப்பறைகளை அதாவது திறந்த வெளி கழிப்பறைகளை இரவில் பெண்களும், பகலில் ஆண்களும் பயன்படுத்துவது என்பது எழுதப்படாத ஒரு சட்டமாகவே இருந்து வருவது தான் வேதனையின் உச்சம்.

பொதுவாகவே கிராமங்களில் இப்படிப்பட்ட பிரச்னைகள் அதிகம் இருந்தாலும், இந்த செய்தியில் வரும் உப்புக்கோட்டையில் சற்று விவகாரமாகவே இருக்கிறது.

உப்புக்கோட்டை கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும்  பாதை மிகவும் குறுகலானது. இந்த பாதையினை விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாதையின் இருபுறம் உள்ள ஓரமான பகுதிகளையும் திறந்தவெளிக் கழிப்பறைகளாக பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நபர் நடந்து செல்லக்கூட இந்த பாதையில் இடம் இல்லை. அந்த அளவு பாதை முழுக்க மனிதக்கழிவுகள் நிரம்பிக்கிடக்கும். அத்தனை பேர் இந்த பாதையினை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கழிவுகளுக்கு ஊடே நடந்து நடந்து சென்று விவசாயிகளுக்கு பழகிப்போச்சு. எங்கு வேண்டுமானாலும் முன்னே செல்பவரை முந்தி செல்ல முயலலாம், ஆனால் இங்கே முடியாது. விவசாயிகள் வரிசையாகத்தான் செல்வார்கள். அதனால் எப்படியோ ஒதுங்கி, ஒதுங்கி சென்று விடுவார்கள்.

ஆனால் யாராவது இறந்தால் அன்று அவர்கள் படும் பாடு இருக்கிறேதே? இறந்தவர் சொர்க்கம் செல்கிறாரோ? நரகம் செல்கிறாரோ? ஆனால், இந்த நரகல் வழியாகத்தான் இறுதி ஊர்வலம் செல்ல வேண்டும்.

சுடுகாடு வரை தேரில் இறந்தவர் உடலை சுமந்து செல்ல வேண்டும். அப்போது இறுதி ஊர்வலத்தில் செல்பவர்கள் வரிசையாக கீழே உற்று கவனித்து, காலை மாற்றி மாற்றி கவனமாக எடுத்து வைத்தா செல்ல முடியும்?. இறுதி ஊர்வலம் நடக்கும் போது ஒரே கசகசப்பு தான். இதனை இக்கிராம மக்கள் இதுவரை சகித்துக் கொண்டு தான் வாழ்கின்றனர்.

வேறு வழி அரசியல்வாதிகளை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் மக்களுக்கு தான் இல்லையே?. ஒரே ஒரு ஆறுதல்.. இறந்தது யாராவது வி.ஐ.பி.,யாக இருந்தால், கிராம ஊராட்சி நிர்வாகம் அன்று மட்டும் இறுதி ஊர்வலத்தின் போது இந்த பாதையை கூட்டி சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் போட்டு வைக்கும். சாதாரண மக்கள் இறந்தால் அதோ கதி தான்....

ஓராண்டு... ஈராண்டு இல்லை... பல ஆண்டுகளாக இந்த பிரச்னை இருந்து வருகிறது. இந்த விஷயம் பற்றி இந்த கிராமத்து சாதாரண குடிமகன் முதல் மாவட்ட நிர்வாகம் வரை பலருக்கும் தெரியும். அந்த கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்கள் சிலர் இந்த தகவலை பத்திரிக்கைகள் வழியாகவும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும், ஊராட்சி ஒன்றியத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்று விட்டனர்.

ஆனால் பிரச்னை தான் தீரவில்லை. மக்களின் மனவேதனையும் தீரவில்லை. இந்த பிரச்னையை தீர்க்க ஏதாவது ஒரு அதியம் நடக்க வேண்டும். இந்த பகுதியை சேர்ந்த எந்த அரசியல்வாதியாவது சினிமா பாணியில் வந்து இப்பிரச்னைக்கு தீர்வு கண்டால் தான் உண்டு. வாழும் போது தான் மனதில் பல பிரச்னைகளை சந்திக்கிறான். இறந்த பின்னர் நடக்கும் இறுதி ஊர்வலமாவது அருவருப்பின்றி இன்றி நிம்மதியாக நடக்க வழி கிடைக்குமா? என்பது தான் இக்கிராம மக்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News