சில மாதங்களில் 40 ஆயிரம் கோடி லாபத்தை அள்ளிக் குவித்த இந்தியா....
ரஷ்ய- உக்ரைன் போர் மிகவும் நீண்ட காலம் நீடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதில் இந்தியா வருமானத்தை அள்ளிக் குவிக்கிறது.
ரஷ்ய உக்ரைன் போர் என்ன ஆனது என்றால்.. இரு தரப்புமே சோர்ந்து விட்டன அல்லது முன்பு ஈரான் ஈராக் தரப்பு 7 ஆண்டுகள் மோதிய நிலைக்கு செல்லும் நிலையில் தான் இருக்கின்றது. இருதரப்புக்குமே முழு வெற்றி இல்லை என்றாலும் 1945க்கு பின் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடப்பது இதுதான் முதல்முறை என்பதால் ரஷ்யாவுக்கு கொஞ்சம் வலி அதிகம்.
1945க்கு பின் யாரும் தொடமுடியா உச்ச நிலை பலத்தில் இருந்த அந்நாடு இப்பொழுது அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாவதும் அதன் விமான நிலையமெல்லாம் சாதாரண ஆளில்லா விமானங்களால் தாக்கப்படுவதும் அதன் தோற்றத்துக்கு விழுந்த அடி. போர் வழக்கம் போல் தொடர்கின்றது, மேற்கு எல்லையில் தாங்கள் திணறும் நேரம் கிழக்கு எல்லை அதாவது ஜப்பான் பக்கம் ஏதும் அடி விழுந்துவிடக் கூடாது என கிழக்கே அமெரிக்க ஜப்பான் எல்லையிலும் காவலையும் ஆயுதங்களையும் பலபடுத்துகின்றது ரஷ்யா. இரு தரப்புமே முரண்டு பிடிக்கும் நிலையில் முன்பு ஈரானுக்கு எதிராக ஈராக்கின் சதாம் உசேனை வளர்த்தது போல உக்ரைன் அதிபரை உருவாக்குகின்றது மேலை தரப்பு.
இது நீண்டகால யுத்தத்துக்கு வழிவகுக்கும் என்றாலும் ரஷ்யாவில் தொழில்நுட்ப சிக்கல் உச்சத்தில் இருப்பதும் ரஷ்யா திணற இன்னொரு முக்கிய காரணமாக உள்ளது.ரஷ்யா முழு தொழில்நுட்ப நிறைவு கொண்ட நாடு அல்ல, அங்கு இறக்குமதிகள் அதிகம் அவ்வகையில் போக்குவரத்து விமான உதிரிபாகம் முதல் ஏகப்பட்ட தேவைகள் உண்டு. அதெல்லாம் கிடைக்காமல் ரஷ்ய விமான போக்குவரத்து முதல் பல தொழில்கள் பெரிதாக பாதிக்கபட்டுள்ளன.
ரஷ்ய நவீன ராணுவ விமானங்களும் சாதனங்களும் சரியான இறக்குமதிபாகமில்லாமல் விழுந்து நொறுங்குவதும் நடக்கின்றது. இந்த போர் இப்பொழுது முடிவதாகவும் தெரியவில்லை. அதே நேரம் எவ்வளவு நாள் தாக்குபிடிக்க முடியும் என்பதும் தெரியவில்லை.உக்ரைனுக்கு நேட்டோவும் அமெரிக்காவும் வரிந்து கட்டி உதவுகின்றன, ஆனால் ரஷ்யாவுக்கு யாருமில்லை எனும் நிலை இருந்தாலும், ரஷ்ய தரப்பு இறங்கி வராமல் போர் முடியாது. ரஷ்யா எந்த அளவு சிக்கலில் சிக்குகிறதோ, அந்த அளவு போர் முடிவினை நெருங்கும்.
இந்த போரால் யாருக்கு லாபம் என்று பார்க்கலாம். சந்தேகமே இல்லாமல் முதல் லாபம் அமெரிக்காவுக்கு. முதற்கட்டமாக ஆயுத சந்தையில் தன் தயாரிப்புகளின் தரத்தை காட்டி உயர்ந்து நிற்கின்றது. அதன் ஜாவலின் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள், ஹைமாஸ் பல்குழல் சிஸ்டம், நாஸ்டம் வான் பாதுகாப்பு சாதனம், ஆளில்லா விமானம் என அதன் தயாரிப்புகள் உலகில் விலை எகிறி நிற்கின்றது.
தன் நீண்டநாள் போட்டியாளரான ரஷ்யாவின் சாதனம் எதுவும் சாதிக்காத நிலையினை இந்த போர் உலகுக்கு காட்டி விட்டது, ரஷ்ய ஆயுத சந்தை மிக தரைமட்டமான நிலைக்கு சென்று விட்டது. அடுத்து ரஷ்ய எண்ணெயும் எரிவாயுவும் ஐரோப்பாவுக்கு செல்லாத நிலையில் அந்த சந்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு வருவதால் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.
இந்த போரில் பெரிதாக பாதிக்கபட்ட நாடு ரஷ்யா, பல்லாயிரகணக்கான வீரர்களை இழந்து ராணுவ சாதனங்களை இழந்து எதிர்காலத்தை இழந்து அது சிக்கித்தான் இருக்கின்றது, மீண்டு வர பல ஆண்டுகளாகும். அதே நேரம் ஐரோப்பிய நாடுகளும் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலையேற்றம், உணவுப்பொருட்களின் விலையேற்றம் என அத்தனை ஐரோப்பிய நாடுகளும் திணறி வருகின்றன.
இந்த போரால் அமெரிக்காவுக்கு அடுத்து பலனடைந்த நாடுகள் சீனாவும் இந்தியாவும் தான். மிக சல்லிவிலையில் கச்சா எண்ணெயினை ரஷ்யாவிடம் இருந்து இருநாடுகளும் வாங்கி குவிக்கின்றன. இதனால் இந்தியாவின் சிலமாத சேமிப்பு மட்டும் 40 ஆயிரம் கோடிகளை நெருங்குகின்றது.மேற்கு நாடுகளுக்கு இது வயிற்றெரிச்சல் என்றாலும் நாம் எதும் செய்து இந்த நாடுகள் ரஷ்யா பக்கம் சென்று விட கூடாது என மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருகின்றன. சீனாவினை கூட தைவான் மேல் கைவைத்தால் அவ்வளவு தான் என எச்சரித்த அமெரிக்கா, இந்தியாவிடம் பம்மியே நிற்கிறது.
உண்மையில் இந்தியா அதன் போக்கில் எண்ணெய் வாங்கி குவிக்கின்றது, அமெரிக்க மிரட்டலுக்கெல்லாம் இந்தியா அசரவில்லை. இந்தியாவினை மிரட்டி பார்க்கும் திட்டமும் அமெரிக்காவிடம் இல்லை. இப்பொழுது பல்லாயிரம் கோடிகளை மிச்சபடுத்துகின்றது இந்தியா. ஒருவகையில் இது இந்தியாவுக்கான் காலம், ரஷ்யா சுமார் 50 ஆண்டுகளாக இந்தியாவிடம் இருந்து பறித்ததையெல்லாம் திருப்பி வாங்கும் காலம் என்றே கூறலாம்.
இந்தியாவுக்கு நண்பன் என சொல்லிகொண்டாலும் தன் சரக்கையெல்லாம் நல்ல விலைக்கு இந்தியாவுக்கு விற்று காசுபார்த்த நாடு ரஷ்யா.அதிக சக்தியில்லா விமானங்கள் முதல் தரமற்ற ஆயுதம் முதல் கொடுத்து பல்லாயிரம் கோடிகளை சுரண்டிக் கொண்டே இருந்தது. இதை மாற்ற முயன்ற லால்பகதூர் சாஸ்திரி மர்மமாக மறைந்தார். அதன் பின் ரஷ்யபிடியில் இருந்து வர இந்தியாவில் யாரும் முயற்சிக்கவில்லை, அந்த மானெக்சா இந்திரா மோதலின் பின்னணிக்கு காரணமே வங்கபோரில் சொதப்பிய சில ரஷ்ய ஆயுதங்களை கைவிட மானெக்சா வற்புறுத்தினார் என்பதும் இந்திரா மறுத்தார் என்பதுமே அக்கால தியரி.
இந்தியர்கள் எல்லோரும் "சோவியத் நாடு" என்றொரு பத்திரிகை படிக்க வைக்கப்பட்ட காலங்களில் இதெல்லாம் மறைக்கப்பட்டது. எப்படி இந்தியா ரஷ்யாவால் சுரண்டப்பட்டது என்பதற்கு சிறிய உதாரணம் பனி அள்ளும் எந்திரங்களை கூட இந்தியா வாங்கி அரக்கோணம் பக்கம் நிறுத்தி வைத்திருந்தது, அந்த அளவு எல்லாவற்றையும் வலுகட்டயாமாக இந்தியாமேல் திணித்த நாடு ரஷ்யா.அதையேதான் சீனாவோடும் செய்தார்கள்.இந்தியா சீனா என தங்களுக்குள் அடிக்கும் இரு நாடுகளுக்கும் தன் ஆயுதங்களை விற்று இருநாடுகளையுமே தன் கட்டுபாட்டில்வைத்திருந்தது ரஷ்யா.
சீனா 1990க்கு பின் மெல்ல வழிவந்தது, இந்தியா மோடி காலத்தில் தான் முழுக்க வெளிவந்திருக்கின்றது.இப்பொழுது இந்தியா ஒரு காலத்தில் தன்னை சுரண்டிய ரஷ்யாவிடம் இருந்து சல்லி விலையில் எண்ணெய் பெற்று மிக சரியாக பழிவாங்கி கொண்டிருக்கின்றது. உக்ரைன் போர் நீடிக்க அளவு இந்த லாபம் கூடிக்கொண்டே போகும். காலம் மிகச்சிறந்த நீதிபதி என்பதற்கு இதனை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.