அடுக்கம் ரோடு சேதமடைந்ததால் கொடைக்கானல் செல்ல சுற்ற வேண்டும்
மழையால் சேதமடைந்த கும்பக்கரை அடுக்கம் ரோட்டினை சீரமைக்க தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து கொடைக்கானல் செல்ல கும்பக்கரை, அடுக்கம் வழியாக அமைக்கப்பட்ட ரோடு பலத்த சேதமடைந்துள்ளதால் பழைய பாதையில் சுற்றிச் செல்வதை தவிர வேறு வழியில்லை.
தேனி மாவட்டத்தில் இருந்து கொடைக்கானல் செல்பவர்கள், வத்தலக்குண்டு அருகே உள்ள கொடைக்கானல் விலக்கிற்கு வந்து அங்கிருந்து மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும். குறைந்தது 3 மணி நேரம் பயணித்தால் மட்டுமே கொடைக்கானல் செல்ல முடியும். இந்நிலையில் பெரியகுளம் கும்பக்கரை அருவி, அடுக்கம் வழியாக பெருமாள்மலையுடன் இணையும் வகையில் ரோடு அமைக்கப்பட்டது. இந்த சாலை முழு பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆனாலும் பஸ் தவிர இதர வாகனங்கள் சென்று வந்து கொண்டிருந்தன. இந்த பாதையை பயன்படுத்தும் போது பயண துாரம் குறைந்தது. இந்நிலையில் நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையில் இந்த ரோடு இரண்டு கி.மீ., துாரம் பிளவுபட்டது. இதனால் இந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல வனத்துறை தடை விதித்தது. இந்த பகுதியி்ல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த ரோட்டை சீரமைக்க இன்னும் பல மாதங்கள் ஆகலாம். அதுவரை பழைய பாதையில் சுற்றிச் செல்வதை தவிர வேறு வழியில்லை என வனத்துறை அதிகாரிகள் கை விரித்துள்ளனர்.