ஓ.பி.எஸ். மகன் தப்ப முடியாது? என வனத்துறை அதிகாரிகள் தகவல்
Tamil Nadu Forest Department -வேலியில் சிக்கி சிறுத்தை பலியான விவகாரத்தில் ரவீந்திரநாத் எம்.பி.தப்பிக்க முடியாது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Tamil Nadu Forest Department -முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,சின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. க்கு பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயில் மலையடிவாரத்தில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்து வேலியில் அமைக்கப்பட்டிருந்த சுருக்கு வலையில் சிக்கி ஒரு ஆண் சிறுத்தை உயிரிழந்தது. இதற்கு ஓரிரு நாள் முன்னதாக இதே இடத்தில் ஒரு பெண் சிறுத்தை வலையில் மாட்டியது. அதனை மீட்க சென்ற உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனை தாக்கி விட்டு அந்த சிறுத்தை தப்பி விட்டது. உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் தற்போது வரை சிறுத்தை தாக்கியதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், ஆண் சிறுத்தை சுருக்கு வலையில் மாட்டி இறந்தது தொடர்பாக ஆட்டுக்கிடை போடும் ஒருவரும், தோட்டத்து மேலாளர் இருவரும் கைதாகி ரிமாண்டில் உள்ளனர். தோட்டத்தில் சிறுத்தை பலியானதற்கும், ஆட்டுக்கிடை போட்டிருந்த நபருக்கும் என்ன தொடர்பு உள்ளது. தோட்டத்து உரிமையாளர் தானே பொறுப்பு என கால்நடை வளரப்போர் சங்கத்தினர் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்திய வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டப்படி சிறுத்தை,புலி, சிங்கம், யானை, மான் மற்றும் வனவிலங்குகள் தேசிய பறவையான மயில் ஆகியவற்றை கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த சூழலில் தான் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.க்கு சொந்தமான நிலத்தில் சிறுத்தைக் குட்டி ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் வேட்டையாடினார்களா அல்லது உண்மையிலேயே மின்வேலியில் சிக்கித் தான் இறந்ததா என்பது வனத்துறை அதிகாரிகளின் முழு விசாரணைக்கு பின்னர்தான் தெரிய வரும். மின்வேலியில் சிக்கி இறந்திருந்தாலும் அது தண்டனைக்குரிய குற்றம் தான்.
சிறுத்தை பலியானது தொடர்பாக நடந்த முதல் கட்ட விசாரணையில் ஆட்டுக்கிடை போடுபவருக்கும், மேலாளர்களுக்கும் தொடர்பு உள்ளது உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் மீது வலுவான ஆதாரங்கள் உள்ளது. இந்த ஆதாரங்களை கோர்ட்டில் ஒப்படைத்துள்ளோம். பொது வெளியில் சொல்ல முடியாது.
சிறுத்தை பலியான விவகாரத்தில் அந்த தோட்டத்து உரிமையாளர் என்ற வகையில் ஓ.பி.எஸ்., மகன் ரவீந்திரநாத் விசாரணை வளையத்திற்குள் வருவார். அவர் தப்பிக்கவே முடியாது. அந்த தோட்டம் ஓ.பி.எஸ்., மகனுக்கு மட்டுமல்ல, மேலும் இரண்டு பேருக்கு சொந்தமானது. இது தொடர்பான ஆவணங்களை சேகரித்து வருகிறோம். அதேபோல் ஒரு எம்.பி.,யை விசாரிக்கவும், கைது செய்யவும் சில நடைமுறைகளை அரசு உருவாக்கி உள்ளது. அந்த நடைமுறைகள் சற்று கடினமானவை. அந்த நடைமுறைகளை முறைப்படி கடந்த பின்னரே ஓ.பி.எஸ்., மகன் ரவீந்திரநாத்தை விசாரித்து நடவடிக்கை எடுப்போம். அவர் எளிதில் தப்பவே முடியாது. அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. ஆனால் உறுதியான நடவடிக்கை இருக்கும். இவ்வாறு கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2