வைகை-பெரியாறு அணைகளுக்கு நீர் வரத்து சரிவு
தேனி மாவட்டத்தில் மழையளவு குறைந்ததால், அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது;
தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாததால் வைகை அணை, முல்லை பெரியாறு அணைகளுக்கு நீர் வரத்து முற்றிலும் குறைந்தது.
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சுமாராகவே பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை வெளுத்துக்கட்டியது. தொடர்ச்சியான மழை பொழிவால் தேனி மாவட்டத்தில் அத்தனை அணைகளுமே நிரம்பின. கண்மாய்களும் 90 சதவீதம் வரை நிரம்பின.
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 19 நாட்களை கடந்தும் 142 அடி என்ற நிலையிலேயே இருந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணை நீர் மட்டம் 141.95 அடி என்ற அளவில் இருந்தது. ஆனால் மழை இல்லாததால் நீர் வரத்து முழுமையாக குறைந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 903 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 600 கனஅடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.
அதேபோல் வைகை அணை நீர் மட்டம் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக முழு கொள்ளவை எட்டியது. அதுவும் தொடர்ச்சியாக நீர் மட்டம் 65 அடிக்கு மேலேயே இருந்தது. கடந்த இரண்டு மாதங்களாகவே நீர் மட்டம் தொடர்ச்சியாக 70 அடிக்கும் மேல் உள்ளது. அணையின் முழு கொள்ளவே 71 அடி தான். எனவே அணைக்கு வரும் நீர் முழுக்க அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1101 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 1069 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.