இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்திற்கு பா.ஜ. ஆதரவு
BJP Support- கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என கேட்டு போராடுங்கள் என்று தேனி மாவட்ட பா.ஜ. அறிவித்துள்ளது.;
தேனி மாவட்ட பா.ஜ., முக்கிய நிர்வாகி டாக்டர் பாஸ்கரன்
BJP Support- முல்லைப்பெரியாறு அணையினை உடைக்க வேண்டும் என வலியுறுத்தி கேரளாவில் 'சேவ்கேரளா' என்ற அமைப்பு 10 மாவட்ட மக்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் முல்லைப்பெரியாறு அணையினை பாதுகாக்க கோரியும், கேரளாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் (இந்த எல்லைக்குள் தான் முல்லைப்பெரியாறு அணை வருகிறது) எனவும் வலியுறுத்தி வரும் 17ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளனர். மொத்தம் ஐந்து மாவட்டங்களில் வசிக்கும் 95 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பினை இச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். உடனே தேனி மாவட்ட பா.ஜ.,வின் முக்கிய நிர்வாகியான (புதிய பொறுப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது) டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., (பிரபல பல் டாக்டர், பா.ஜ., மருத்துவு அணியின் முக்கிய பொறுப்பாளர். தீவிரமான மோடி ஆதரவாளர்) இந்த தகவல் அறிந்து ச.அன்வர்பாலசிங்கத்தை தொடர்பு கொண்டு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் தற்போது கையில் எடுத்துள்ள பிரச்சினை மிகவும் முக்கியமானது. இதனை பிரிவினை என யாரும் விமர்சிக்க கூடாது. இது பிரிவினை அல்ல. உரிமைகளை மீட்டெடுக்கும் பிரச்சினை. பீர்மேடு, உடும்பஞ்சோலை, தேவிகுளம் தாலுகாக்களில் 90 சதவீதம் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களின் விருப்பத்திற்கு மாறாக இப்பகுதி கேரளாவில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழர்கள் கேரளாவின் இடுக்கி மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ளனர். அங்குள்ள நிலங்களி்ல் பெரும்பாலானவை தமிழர்களுக்கு சொந்தம். எனவே இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க கேட்டு போராடுமாறு நான் முல்லைப்பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். அவர்களின் போராட்டத்திற்கு எனது ஆதரவு முழுமையாக உள்ளது. நான் என் சார்பில் மக்களையும், கட்சி தொண்டர்களையும் திரட்டி இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்பேன். இடுக்கி மாவட்டத்தை தமிழகத்தோடு சேர்த்து விட்டால் நிச்சயம் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை முடிவுக்கு வந்து விடும்.
இவ்வாறு கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2