இந்தியாவை மதிக்க உலக நாடுகளுக்கு கற்றும் கொடுக்கும் பிரதமர் மோடி
உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு மிகப்பெரிய நல்ல பெயர் கிடைத்துள்ளது என்பதை நேரடியாக உணரமுடிகிறது;
சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய தொழிலதிபரான ஆர்பிஎஸ்ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா, ‘இந்தியாவை மதிக்க உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கற்றுக் கொடுத்துள்ளார்’ என்று கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வெளிநாடுகளில், இந்தியர்களுக்கு யாரும் மரியாதை தந்ததில்லை. இன்று வெளியில் சென்று 'நான் இந்தியாவி லிருந்து வந்தவன்' என்று சொன்னால் மரியாதை கொடுக்கப்படுகிறது என்றும் கூறினார்.
அவர் கூறுகையில், ‘நான் சிங்கப்பூர் நாட்டிற்கு வந்து ஆண்டுகள் 19 ஆகிவிட்டது. இந்த நாட்டின் நிரந்தர வாசியாகி 14 வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது. எனக்கு உப்பிட்ட இந்த தேசத்தில் தனக்கென்று எந்த ஒரு இயற்கை வளமும் இல்லாமல் போனாலும் தனக்கென உலக வரைபடத்தில் ஒரு நிலையான நேர்மையான நாடு என்ற இடத்தை இந்த தேசம் பெற்று எடுத்தது. அந்த இடத்தை பெற இந்த நாடும் நாட்டு மக்களும் சிந்திய வியர்வையின் அளவு சொல்லி மாளாது. அவ்வளவும் கடின உழைப்பால் மட்டுமே சாத்தியமானது.
இந்தியாவில் பேச்சுக்கு பேச்சு அரசியல்வாதிகளும் செல்லுலாய்ட் கூத்தாடிகளும் சிங்கப்பூரை மேற்கோள் காட்டி அடுக்கு வசனம் பேச வேண்டியது. ஆனால் சுயமாக எந்தவிதத்திலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ நாட்டின் மேல் உள்ள அக்கறையை செயலில் காட்டினர் என்றால் நிச்சயம் இல்லை. வருமான வரி சோதனை நடக்காத ஏதாவது பிரபலங்கள் இருந்தால் அதிசயமே. நம் நாட்டில் நடக்கும் அவ்வித அசிங்கங்கள் அனைத்தும் சிங்கப்பூரின் பிரபல நாளிதழின் முதல் பக்கத்தில் அரங்கேறிய வண்ணம் இருந்தது.
முந்தைய 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், 2ஜி, காமென்வெல்த் விளையாட்டு, சத்யம், நிலக்கரி என சனிக்கிழமை காலை இதழ்களின் முதல் பக்கம் முழுவதும் இந்தியாவை பற்றிய தரம் தாழ்ந்த செய்திகளையே பார்க்க முடிந்தது. வேலை இடத்திற்கு சென்றால் அதை பற்றி கேள்வி கேட்கும் சக ஊழியரை தாக்கு பிடிக்க முடியாமல் நான் திண்டாடிய நாட்கள் ஏராளம் உண்டு. டாக்சியில் ஏறினால் ஓட்டுனருடன் பேச்சு கொடுத்தால்... முதல் கேள்வியே ஏன் உங்கள் இந்தியா இவ்வளவு கேவலமாய் இருக்கிறது என்றே இருக்கும். ஏன் இந்த மாதிரியான அரசியல்வாதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என்று கேட்பார்கள். பதில் கூற முடியாது தவித்திருக்கிறேன்.
2014ல் மோடி பதவி ஏற்ற பின், வந்தது தூய்மை இந்தியா திட்டம். முதன் முதலில் சீன டாக்சி ஓட்டுநர் ஒருவர், திட்டத்தை பாராட்டி என்னிடம் பேசியது வியப்பில் ஆழ்த்தியது. அதை தொடர்ந்து வந்த கழிப்பறை திட்டம். சில மேற்கத்திய குறிப்பாக இங்கிலாந்தை சேர்ந்த நண்பர்கள் அதை கேலி பேச, அந்த திட்டம் மிகவும் பிரபலமாகவே விவாதிக்கப்பட்டது. கேலி பேசிய அந்நாட்டவரை எதிர்கொள்வது எனக்கு எளிதாகவே இருந்தந்து. நான் கேட்ட ஒரே எதிர் கேள்வி, ஏன் எங்களை ஆண்ட 200 வருடங்களில் நீங்கள் ஏன் அதை செய்யவில்லை என எதிர்கேள்வி கேட்டு மடக்கினேன்.
இப்படி மோடியின் வளர்ச்சித் திட்டங்கள் ஒவ்வொன்றாக சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. அதற்கு முந்தைய 10 ஆண்டு ஆட்சியில் வெறும் ஊழல்களையே தலைப்பு செய்திகளாய் வெளியிட்ட அதே பத்திரிகை இப்பொழுது இந்தியாவின் வளர்ச்சியை பற்றி பேசத் தொடங்கியிருந்தது. கடந்த வாரம் இந்தியா செல்ல விசா ஏற்பாடு செய்த மேற்கத்திய நாட்டை சேர்ந்த சக ஊழியர் இந்தியாவின் இ-விசா முறையை பற்றி மிகவும் பாராட்டிப் பேசினார். முன்பெல்லாம் ஒரு வாரம் ஆகும் என்றும் இப்பொழுது 2 நாட்களில் இந்தியா விசா கிடைத்ததை சந்தோஷமாக குறிப்பிட்டார். மோடி நிஜமான பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார் என அவர் மனதாரப் பாராட்டியதை கேட்க பெருமையாய் இருந்தது.
கடந்த இரண்டு முறையும் பாகிஸ்தானுக்குள் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றியும் நிறைய நண்பர்களுடன் பெருமையாய் என்னால் விவாதிக்க முடிந்தது. கடைசியாக, இந்தியாவின் பங்கு சந்தை குறியீடு, மோடி ஆட்சியில் அதன் வளர்ச்சி விகிதத்தை பார்த்து பல பன்னாட்டு நண்பர்கள் பொறாமையுடன் பேசியிருக்கின்றனர் என்னிடம்.
மோடியின் ஆட்சியில் என்னுடைய இந்தியா வளமான சர்வ வல்லமை கொண்ட இந்தியாவாக மாறியதின் எதிரொலி இங்கே சிங்கப்பூரில் கேட்கிறது நண்பர்களே.. நாடி நரம்பெல்லாம் இந்தியாவை பற்றி கனவு காணும் ஒருவரால் மட்டுமே இந்தியர்களுக்கு எது நல்லது என்பதை உணர்ந்து இப்படிச் செயல்பட முடியும்.ஒரு நாட்டினரை அந்நாட்டின் பிரதமரின் வழி பார்ப்பதென்பதனை முதல் முறையாக என்னால் உணர முடிகின்றது. பொது இடங்களில் சந்தித்த பன்னாட்டினர் பலர் மோடியை பாராட்டியதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
பிரதமராக 5-6 முறை சிங்கப்பூர் வந்த அவர் பேசிய ஒவ்வொரு பேச்சும் இங்கே அனைவரையும் பிரமிக்க வைத்தது. குறிப்பாக ஃபின் டெக் ஃபெஸ்டிவலில் அவர் பேசிய பேச்சை கேட்ட அனைவரும் வாவ் என்றனர். இந்தியனாய் என்னை தலை நிமிர வைத்தார் மோடி. இவ்வாறு கூறியுள்ளார்.